தேசிய செய்திகள்

இஸ்ரேல்-ஈரான் மோதல்; பஞ்சாப்பில் பல்வேறு விமானங்கள் ரத்து

பெங்களூரு நகரிலும் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

அமிர்தசரஸ்

ஈரான் நாட்டை நேற்று அமெரிக்காவும், இஸ்ரேலும் கடுமையாக தாக்கின. இதில் போர் ஜெட் விமானங்கள் வான் வழியே சென்று தாக்குதல் நடத்தின. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் காணப்படுகிறது.

இந்த சூழலில், பஞ்சாப்பின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் புறப்பட்டு செல்ல இருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதுபற்றி அமிர்தசரஸ் விமான நிலையத்தின் இயக்குநர் பூபிந்தர் சிங் கூறும்போது, 2 விமானங்கள் தரை பகுதியிலேயே வைத்து ரத்து செய்யப்பட்டன.

2 விமானங்கள் புறப்பட்டு சென்று விட்டன. அவற்றில் ஒன்று இரவு 7 மணியளவில் திரும்பி வரும்படி அழைக்கப்பட்டது. மற்றொரு விமானம் சூரத்துக்கு திருப்பி விடப்பட்டது என்றார்.

ஷார்ஜாவில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி வந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. பிர்மிங்காம் நகரில் அமிர்தசரஸ் நோக்கி வந்த விமானமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதேபோன்று பெங்களூரு நகரிலும் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் பரிதவித்தனர்.