சென்னை,
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) கனவு திட்டமான மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் 2027-ம் ஆண்டு செயல்படுத்தப்பட இருக்கிறது. இதற்காக 3 ஆள் இல்லாத ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி சோதனை நடத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு சோதனைகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தத் திட்டத்துக்காக இந்திய விமானப்படை வீரர்களான சுபான்சு சுக்லா, பிரசாந்த் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் ஆகிய 4 குரூப் கேப்டன்கள் விண்வெளி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் மிக முக்கியமான கட்டமான 2-வது ஒருங்கிணைந்த ஏர் டிராப் சோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இந்த சோதனை நடைபெற்றது.
விண்வெளி வீரர்கள் பயணிக்கும் விண்கலம், விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பும் போது பாதுகாப்பாக தரையிறக்குவது மிகப்பெரிய சவால் நிறைந்த பணி. விண்கலம் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையும்போது அதன் வேகம் மிக அதிகமாக இருக்கும். அந்த வேகத்தைக் கட்டுப்படுத்தி, கடலில் பாதுகாப்பாக இறக்குவதற்குப் பயன்படுத்தப்படும் பாராசூட் அமைப்புகளின் செயல்திறனைச் சோதிப்பதே இந்த 'ஏர் டிராப்' சோதனையின் முக்கிய நோக்கமாகும்.
அதன்படி இந்திய விமானப்படையின் சினூக் ஹெலிகாப்டர் மூலம். சுமார் 5.7 டன் எடையுள்ள ககன்யான் மாதிரி விண்கலம் சுமார் 3 கிலோ மீட்டர் உயரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் நிர்ணயிக்கப்பட்ட உயரத்தை அடைந்தவுடன், ஹெலிகாப்டரிலிருந்து விண்கலம் விடுவிக்கப்பட்டது. அந்த விண்கலம் கீழே விழத் தொடங்கியதும், அதில் பொருத்தப்பட்டிருந்த 10 பாராசூட்டுகளும் படிப்படியாகத் தானியங்கி முறையில் விரிவடைந்தன.
முதலில் சிறிய பாராசூட்டுகளும், இறுதியாக பிரதான பாரா சூட்டுகளும் விரிவடைந்து விண்கலத்தின் வேகத்தை ஒரு இறகு போலக் குறைத்தன. அனைத்து பாராசூட்டுகளும் சரியாக செயல்பட்டதால், விண்கலம் திட்டமிட்டபடி ஸ்ரீஹரிகோட்டா கடற்கரைக்கு அருகிலுள்ள வங்கக் கடல் பகுதியில் சுமூகமாக தரையிறங்கியது. ஒருவேளை ஒரு பாராசூட் செயல்படத் தவறினாலும், மற்றொன்று இயங்கி விண்கலத்தைக் காப்பாற்றும் 'ரெடென்டன்சி' தொழில்நுட்பம் இதில் உறுதி செய்யப்பட்டது.
கடலில் விழுந்த விண்கலத்தை இந்தியக் கடற்படை வீரர்கள் வெற்றிகரமாக மீட்டனர். இது விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பிய பின் அவர்களை மீட்கும் ஒத்திகையாகவும் அமைந்தது. இந்த ஏர் டிராப் சோதனையின் வெற்றி, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முன் மேற்கொள்ளப்பட வேண்டிய 'ஆளில்லா ககன்யான் விண்கலம் ஏவுதலுக்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் 'வயோமித்ரா' என்ற பெண் ரோபோவை ஏற்றிச் செல்லும் முதல் ஆளில்லா விண்கலம் ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதற்கட்ட ஏர் டிராப் சோதனையை இஸ்ரோ நடத்தி இருந்தது. ககன்யான் திட்டத்திற்கான ஏர்டிராப் சோதனை வெற்றிகரமாக நிறைவு பெற்றதற்கு, இஸ்ரோ குழுவினரை மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் பாராட்டியுள்ளார்.