தேசிய செய்திகள்

‘நடப்பாண்டு 27 திட்டங்களை செயல்படுத்த இஸ்ரோ திட்டம்’ விஞ்ஞானிகள் அறிவிப்பு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யானின் 4 திட்டங்கள் உள்ளிட்ட 27 விண்வெளி திட்டங்களை நடப்பாண்டு செயல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்த நிதியாண்டுக்கான (2026-2027) ஆண்டு அறிக்கையை தற்போது வெளியிட்டு உள்ளது. அதில் செயல்படுத்துவதற்காக 27 விண்வெளி திட்டங்களை பட்டியலிட்டுள்ளது.

குறிப்பாக புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் 3. தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் 2, வழிசெலுத்தல் செயற்கைக்கோள்கள் 2, தொழில்நுட்ப செயல்விளக்கி 3, பி.எஸ்.எல்.வி. 4, ஜி.எஸ்.எல்.வி. 3, எல்.வி.எம். 1, எஸ்.எஸ்.எல்.வி. 5 மற்றும் ககன்யான் 4 திட்டங்கள் நடப் பாண்டு செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.

மனிதனை விண்ணுக்கு அழைத்து செல்லும் ககன்யான் திட்டத்திற்காக விண்ணில் ஏவப்படும் முதல் ஆளில்லா ககன்யான் சோதனை ராக்கெட் பயணத்திற்கு இஸ்ரோ தயாராகி வருகிறது. இஸ்ரோவின் விண்வெளி திட்டங்களுக்கு இந்திய விண்வெளித்துறைக்கு தற்போது 450 தொழிற்சாலைகளும், 130-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களும் ஆதரவு அளித்து வருகின்றன.

இஸ்ரோ கடந்த ஆண்டு விண்ணில் ஏவிய பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் டின் 3-வது கட்டத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு திட்டம் தோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து, இஸ்ரோ சற்று ஒரு பின்னடைவை சந்தித்ததாக கூறப்படுகிறது. இது கடந்த ஆண்டு மே மாதத்திற்கு பிறகு ஏற்பட்ட 2-வது தொடர்ச்சியான தோல்வியாகும். இந்த நிதியாண்டில், 2025-2026-ம் ஆண்டை விட இருமடங்கு திட்டங்களை அது பட்டியலிட்டு உள்ளது.

ககன்யான் திட்டத்திற்கான பணிகளை இஸ்ரோ பட்டியலிட்டு உள்ளது. குறிப்பாக தரைவழி இணைப்பு சேனல்களை நிறுவுவதன் அவசியத்தை அது எடுத்துரைத்து உள்ளது. இந்திய கடற்படை நிலையம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா பகுதி, பெங்களூருவில் உள்ள ககன்யான் திட்ட கட்டுப்பாட்டு மையம் மற்றும் ககன்யான் கட்டுப்பாட்டு வசதி ஆகியவற்றுக்கு இடையே தரைவழி இணைப்புகள் நிறுவப்பட்டு உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் குறிப்பிட்டு உள்ளனர்.

ககன்யான் திட்ட கட்டுப்பாட்டு மையம், ககன்யான் கட்டுப்பாட்டு வசதி மற்றும் டெல்லியில் உள்ள குழு தொகுதி மீட்பு மையம் ஆகியவற்றுக்கு இடையேயான இணைப்பு நிறுவப்பட்டு சோதிக்கப்பட்டு உள்ளது. ஆட்கள் உள்ள மற்றும் ஆட்கள் இல்லாத திட்டங்களுக்கான தரை நிலைய ஆதர வுக்காக சுவீடன் விண்வெளி நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டு உள்ளது.

அதேபோல் ஆஸ்திரேலியாவின் கோகோஸ் (கீலிங்) தீவுகளில் ஒரு தரை நிலைய முனையத்தை நிறுவுவதற்காக செயல்படுத்தப்பட்ட உரிமப் பத்திரமும் கையெழுத்திடப்பட்டு உள்ளது. இஸ்ரோவும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையும், திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்துடன் விண்வெளி மருத்துவத்தில் ஒத்துழைப்புக்கான ஒரு கட்டமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.