தேசிய செய்திகள்

ஐடி ஊழியரை கழுத்தை நெரித்து கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை

சிவில் என்ஜினீயரான இவருக்கு திருமணமாகி பத்மாவதி என்ற மனைவி இருந்தார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் சுமந்த். சிவில் என்ஜினீயரான இவருக்கு திருமணமாகி பத்மாவதி என்ற மனைவி இருந்தார். பத்மாவதி ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இருவரும் பெங்களூருவில் உள்ள ராஜகோபால் நகரில் வாடகை வீட்டில் வந்து வந்தனர். அதேவேளை, கணவன் - மனைவி இடையே கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

ஐடி ஊழியரை கொன்று கணவன் தற்கொலை

இந்நிலையில், சுமந்திற்கும், பத்மாவதிக்கும் இடையே நேற்று இரவு மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், பத்மாவதி தனது அறைக்கு சென்று உறங்கியுள்ளார். அப்போது, மனைவி உறங்கிகொண்டிருந்தபோது அங்கு வந்த சுமந்த் மனைவியின் கழுத்தை நெரித்தும், தலையணையால் முகத்தை அழுத்தியும் மூச்சுத்திணற செய்து பத்மாவதியை கொலை செய்துள்ளார். பின்னர், மனைவியை கொலை செய்துவிட்டதாக தனது தாயாருக்கு செல்போன் மூலம் மெசேஜ் அனுப்பிய சுமந்த் வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சுமந்த்தின் செல்போன் மெசேஜ்-ஐ பார்த்த தாயார் மகன் வசித்து வந்த வீட்டின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து விரைந்து சென்ற வீட்டின் உரிமையாளர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு பத்மாவதி படுக்கை அறையில் சடலமாகவும், சுமந்த் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகவும் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மனைவியை கொலை செய்துவிட்டு சுமந்த் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.