சென்னை,
தமிழக முதல்-அமைச்சராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் (51) நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் ஆர்.வி. ஆர்லேகர் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். விஜய்யுடன் 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்தநிலையில், தமிழ்நாடு முதல்-அமைச்சராக பதவியேற்ற விஜய்க்கு ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பதவியேற்பு விழாவில் ஏற்பட்ட தாமதத்தைப் பார்க்கும்போது, நிலைமை இந்த அளவிற்குச் சென்றிருக்கக் கூடாது. இதற்கு மூன்று முதல் நான்கு நாட்கள் ஆனதுடன், கவர்னர் மாளிகைக்கு (மக்கள் பவன்) பலமுறை செல்ல வேண்டியிருந்தது.
ஆனால் இறுதியாக பெரும்பான்மை எண்ணிக்கை நிரூபிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை என்பது சட்டசபையில்தான் நிரூபிக்கப்பட வேண்டுமே தவிர, கவர்னர் மாளிகையில் அல்ல. எது எப்படியோ, காலதாமதமாக நடந்தாலும் இது நல்லதுதான் என்றார்.
விஜய் தனது பெரும்பான்மையை நிரூபிக்க சில நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறிய ஓமர் அப்துல்லா, "அவர் தனது பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று நாங்கள் நம்புகிறோம்," என்றார்.
தமிழக முதல்-அமைச்சராக விஜய் நேற்று பதவியேற்ற நிலையில் அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.