நகை திருட்டு 
தேசிய செய்திகள்

ஜக்தல்பூர்: நகைக்கடையில் ரூ.1.74 கோடி தங்க நகைகள் கொள்ளை

நகைகளை வாங்குவது போல் பல்வேறு டிசைன்களைக் கேட்டு கடை ஊழியர்களின் கவனத்தை அந்த பெண்கள் திசைதிருப்பியுள்ளனர்.

ராய்ப்பூர்,

சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் உள்ள பிரபல நகைக்கடையில், வாடிக்கையாளர்கள் போல் நடித்து வந்த பெண்கள் கொண்ட கும்பல் ரூ.1.74 கோடி மதிப்புள்ள 1.2 கிலோ தங்க நகைகளைத் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டத்தைப் பயன்படுத்தி கைவரிசை

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தின் தலைமையிடமான ஜக்தல்பூர் சஞ்சய் மார்க்கெட் (பல்ஸ் ரோடு) பகுதியில் 'மோதி ஜூவல்லர்ஸ்' என்ற நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு கடந்த (சனிக்கிழமை) கடையில் வாடிக்கையாளர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட 4 முதல் 5 பெண்கள் கொண்ட கும்பல், குழந்தைகளுடன் வாடிக்கையாளர்கள் போல் கடைக்குள் நுழைந்துள்ளனர்.

கவனத்தைத் திசைதிருப்பி திருட்டு

நகைகளை வாங்குவது போல் பல்வேறு டிசைன்களைக் கேட்டு கடை ஊழியர்களின் கவனத்தை அந்த பெண்கள் திசை திருப்பியுள்ளனர். ஊழியர்கள் மற்ற வாடிக்கையாளர்களைக் கவனிப்பதில் மும்முரமாக இருந்த நேரத்தில், அங்கிருந்த சுமார் 1,200 கிராம் (1.2 கிலோ) தங்க நகைகள் அடங்கிய பெட்டியை அவர்கள் தங்களது பைக்குள் மறைத்து வைத்துக்கொண்டு நைசாக அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

சிசிடிவி காட்சிகள் மூலம் அம்பலம்

சிறிது நேரம் கழித்து நகைப் பெட்டி மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில், பெண்கள் கும்பல் திட்டமிட்டு நகைப் பெட்டியை திருடிச் செல்லும் காட்சிகள் தெளிவாகப் பதிவாகியிருந்தன. திருடுபோன நகைகளின் மொத்த மதிப்பு ரூ.1.74 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

போலீசார் தீவிர விசாரணை

இது குறித்து கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், சிட்டி கோட்வாலி காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து போலீசார் தப்பியோடிய பெண்கள் கும்பலைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT