புதுடெல்லி,
டெல்லியில், முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் (வயது 75) கடந்த 11-ந்தேதி காலை நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சில நிமிடங்களில் அவர் மயங்கி விழுந்தார். அவரது பாதுகாவலர்கள் உடனடியாக அவரை வீட்டிற்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்து எய்ம்ஸ் மருத்துவர் சந்தீப் சேத் மற்றும் தலைமையிலான மருத்துவக் குழுவினர் உடனடியாக நேரில் சென்று ஜெகதீப் தன்கரின் உடல்நலத்தை பரிசோதனை செய்தனர். அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சையும் அளித்தனர்.
இதையடுத்து ஜெகதீப் தன்கர் ஆம்புலன்ஸ் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்குள்ள கார்டியோ-நியூரோ பிரிவில் ஜெகதீப் தன்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மருத்துவமனியில் 3 நாட்கள் சிகிச்சையில் இருந்த ஜெகதீப் தன்கர், இன்று சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவரது உடல்நலம் சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி வீட்டில் ஓய்வெடுக்க ஜெகதீப் தன்கருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.