தேசிய செய்திகள்

இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்காளதேசத்தினர் 3 பேர் கைது

வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஆயிரக்கணக்கானோர் சட்டவிரோதமாக நுழைந்து பல்வேறு மாநிலங்களில் வசித்து வருகின்றனர்.

ஜெய்ப்பூர்,

வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஆயிரக்கணக்கானோர் சட்டவிரோதமாக நுழைந்து பல்வேறு மாநிலங்களில் வசித்து வருகின்றனர். இதையடுத்து, இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து பல்வேறு மாநிலங்களில் வசித்து வரும் வங்காளத்தினரை கைது செய்யும் நடவடிக்கையில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.

சட்டவிரோத அகதிகள்

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டவிரோதமாக வசித்து வந்த பெண் உள்பட 3 வங்காளதேசத்தினரை போலீசார் இன்று கைது செய்தனர். இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அப்பெண் அசாம் வழியாக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளார். பின்னர் ராஜஸ்தான் மாநிலம் நகவூர் சென்ற அப்பெண் தனது மத அடையாளத்தை மாற்றி இந்து மத அடையாளத்துடன் வசித்து வந்துள்ளார். பின்னர், அங்கு இளைஞரை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.

இதையடுத்து ருபையா என்ற அப்பெண்ணை போலீசார் கைது செய்தனர். அதேபோல், ராஜஸ்தானில் வசித்து வந்த நதீம், ஹல்டர் ஆகிய மேலும் 2 வங்காளதேசத்தினரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.