எஸ்-400' வான் பாதுகாப்பு அமைப்பு 
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தான் எல்லையில் 5-வது எஸ்-400 ஏவுகணை – மத்திய அரசு திட்டம்

இந்திய விமானப்படை குழுவினர் அடுத்த மாதம் ரஷியா சென்று, 5-வது எஸ்-400 அமைப்பில் இறுதிக்கட்ட சோதனைகளை மேற்கொள்வார்கள்.

புதுடெல்லி,

ரஷியாவிடம் இருந்து இந்தியா வாங்க உள்ள 5-வது 'எஸ்-400' வான் பாதுகாப்பு அமைப்பை, ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லையையொட்டி நிறுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

4 அமைப்புகள் உள்ளன

எதிரி நாட்டு போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) நடுவானிலேயே இடைமறித்து அழிக்கும் வல்லமை கொண்டது ரஷியாவின் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு. இந்தியாவிடம் தற்போது இந்த வகையை சேர்ந்த 4 பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன.

எல்லை பாதுகாப்பு

இதில் 3 அமைப்புகள் பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாகிஸ்தான் எல்லையிலும், மற்றொரு அமைப்பு அருணாசல பிரதேச எல்லை பாதுகாப்புக்காக அஸ்ஸாமிலும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த மோதலின்போது, எதிரிகளின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியும், ஏவுகணைகளை தடுத்தும் இந்த அமைப்பு பெரும் பங்காற்றியது.

பிப்ரவரிக்குள் நிலைநிறுத்தப்படும்

இந்த நிலையில், ரஷியாவிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட உள்ள 5-வது எஸ்-400 அமைப்பை, ஜம்மு-காஷ்மீரில் 740 கி.மீ. நீளமுள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்திய விமானப்படை குழு

இதுகுறித்து அரசு வட்டாரங்கள் கூறுகையில், "இந்திய விமானப்படை குழுவினர் அடுத்த மாதம் ரஷியா சென்று, 5-வது எஸ்-400 அமைப்பில் இறுதிக்கட்ட சோதனைகளை மேற்கொள்வார்கள். அதன்பிறகு அது இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் ஜம்மு-காஷ்மீர் எல்லையில் இந்த அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்பு நிலைநிறுத்தப்படும்" என்று தெரிவித்தன.

SCROLL FOR NEXT