தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர்: ஊடுருவல் முயற்சி முறியடிப்பு; பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஊடுருவல் முயற்சி ஒவ்வொன்றும் தோல்வியடையும். ராணுவ சேவையில் ஈடுபட்டு, நாட்டை பாதுகாக்கிறோம் என இந்திய ராணுவம் வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது.

பூஞ்ச்

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கிருஷ்ண காடி பிரிவில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய ராணுவத்தினர் தொடர்ச்சியாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், எல்லை பகுதியில் இருந்து 300 மீட்டருக்கு உட்பட்ட இந்திய பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில், பயங்கரவாதிகள் செயல்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் மாலை 4 மணியளவில் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து வீரர்கள் அதிரடியாக செயல்பட்டு, ஒரு பயங்கரவாதியை சுட்டு கொன்றனர். இதனால் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டு உள்ளது.

எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் எந்தவித அத்துமீறலும் இல்லை என இந்திய ராணுவத்தினர் உறுதி செய்தனர். அந்த பகுதியை வீரர்கள் தொடர்ந்து தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்துள்ளனர். ஊடுருவல் முயற்சி ஒவ்வொன்றும் தோல்வியடையும். ராணுவ சேவையில் ஈடுபட்டு, நாட்டை பாதுகாக்கிறோம் என அதுபற்றி இந்திய ராணுவம் வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.