தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

ஸ்ரீநகர்

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர் இ தொய்பாவின் முக்கியத் தளபதி உள்பட 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

குப்வாரா மாவட்டம் கனிபோரா கிரல்குண்ட் பகுதியில் தீவிரவாதிகள் மறைந்திருந்த பழத்தோட்டத்தில் அதிரடியாக புகுந்த ராணுவத்தினர் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர். நீண்ட நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டைக்குப் பின் 2 பேர் கொல்லப்பட்டனர்.

இதேபோன்று, சோபியான் மாவட்டம் சித்ரகாம் கிராமத்தில் தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டான். அப்பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்பதால் தேடுதல் வேட்டையில் ராணுவத்தினர் ஈடுபட்டனர்.

இது குறித்து காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் கூறியதாவது:- காஷ்மீரில் கடந்த 4 நாட்களில் 3 வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்; கொல்லப்பட்டவர்களில் 4 பேர் காஷ்மீரின் டாப்-10 பயங்கரவாதிகளாவர் என கூறினார்.