தேசிய செய்திகள்

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை; வெளியான அறிவிப்பு

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் (சிஜேபி) கடந்த 10ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி,

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை என்று டெல்லி போலீஸ் அறிவித்துள்ளது.

ஜந்தர் மந்தர்

நாட்டில் மக்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகள் என பல்வேறு தரப்பினரும் ஜனநாயக ரீதியில் போராட இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முறையாக அனுமதி பெற்று அந்தந்த இடங்களில் போராட்டத்தில் ஈடுபடலாம். அந்த வகையில் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்ட இடங்கள் பட்டியலில் ஜந்தர் மந்தர் இருந்தது. ஜந்தர் மந்தரில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

சிஜேபி போராட்டம்

இதனிடையே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் முறைகேடு நடைபெற்றதாக கூறி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ராஜினாமா செய்ய வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் (சிஜேபி) கடந்த 10ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் தலைநகர் டெல்லியில் சாலை, ரெயில், மெட்ரோ ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும், ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட கரப்பான் ஜனதா கட்சி அமைப்பு திட்டமிட்டுள்ளது.

அனுமதியில்லை

இந்நிலையில், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இனி அனுமதியில்லை என்று டெல்லி போலீஸ் அறிவித்துள்ளனர். போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்ட இடங்களுக்கான பட்டியலில் இருந்து ஜந்தர் மந்தர் நீக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சக குழுவின் பரிந்துரைப்படி டெல்லியில் ராம் லீலா மைதானம், புராரி மைதானம், கிழக்கு டெல்லி சிபிடி மைதானம் ஆகிய 3 இடங்களில் இனி அனுமதிபெற்று போராட்டங்களை நடத்தலாம் என்று டெல்லி போலீஸ் அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT