தேசிய செய்திகள்

விவசாயிகள் எதிர்ப்பு எதிரொலி: மோடியின் கனவுத்திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்திய ஜப்பான் நிறுவனம்

விவசாயிகள் தொடர் எதிர்ப்பால் மோடியின் கனவுத்திட்டமான புல்லெட் ரயில் திட்டத்துக்கான நிதியுதவியை ஜப்பான் நிறுத்தியதாக கூறப்படுகிறது.

புதுடெல்லி,

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு புல்லட் ரயில் இயக்குவது பிரதமர் மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்றாகும். இந்தத் திட்டத்தின் மதிப்பு சுமார் ரூ.ஒரு லட்சம் கோடியாகும். இந்தத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா கடந்த மே மாதம் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் தயாராகும் இந்தத் திட்டம் 2023-ம் ஆண்டு நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் தொடக்கக் கட்டமான நிலம் கையகப்படுத்துவதிலேயே பல சிக்கல்கள் எழுந்தன. இரு மாநிலங்களிலும் உள்ள விவசாயிகள் நிலம் கையகப்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சமீபத்தில் ஆயிரம் விவசாயிகள் அகமதாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த திட்டத்துக்கு ஜப்பான் நாட்டைச்சேர்ந்த ஜேஐசிஏ நிறுவனம் நிதி உதவி அளிக்க முன்வந்தது. ஆனால், நாளுக்குநாள் விவசாயிகளிடம் இருந்து எதிர்ப்பு வலுத்ததால், ஜேஐசிஏ நிறுவனத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டதையடுத்து, நிதியுதவியை நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்துக்கு ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் (ஜேபிசிஏ) நிதி உதவியை நிறுத்தி வைத்ததாகத் தேசிய அதிவேக ரயில் கழகம் (என்ஹெச்எஸ்ஆர்சிஎல்) தெரிவித்துள்ளது

இந்திய அரசுக்கும், ஜேஐசிஏ அமைப்புக்கும் இடையே 1000 கோடி யென் (640 கோடி) கடன் ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ள நிலையில், இன்னும் ஜேஐசிஏயிடம் இருந்து இதுவரை பணம் இந்திய அரசுக்கு வரவில்லை என்று என்ஹெச்எஸ்ஆர்சிஎல் தெரிவித்துள்ளது.