தேசிய செய்திகள்

அரசு மருத்துவமனையில் பெண்ணின் ரூ.4 லட்சம் மதிப்பிலான நகை மாயம்; பையோடு திருடி சென்ற நாயால் பரபரப்பு

போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது, பையை நாய் ஒன்று வாயில் கவ்வி சென்றது தெரிய வந்தது.

போபால்

அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான நகையை பையோடு திருடி சென்ற நாயால் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய பிரதேசத்தின் மாண்ட்சார் நகரில் மாவட்ட மருத்துவமனையின் அறுவை சிகிச்சை வார்டில் லதாபாய் வால்மீகி என்ற பெண்ணின் மகன் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரை பார்க்க வால்மீகி சென்றுள்ளார். உடன் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், ரூ.2 ஆயிரம் பணம் உள்ளிட்டவற்றை ஒரு பையில் போட்டு எடுத்து சென்றிருக்கிறார்.

நகை பை

அவற்றை அருகே வைத்து விட்டு படுத்திருக்கிறார். இந்நிலையில், திடீரென அது காணாமல் போனது. நகை பையை பல இடங்களில் தேடியுள்ளனர். மகன் சிகிச்சை பெற்ற நிலையில், அவரை பார்க்க வந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதனை தொடர்ந்து தகவல் அறிந்து வந்த போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது, பையை நாய் ஒன்று வாயில் கவ்வி சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து காட்சிகளை வைத்து தேடி சென்றதில், மருத்துவமனை வளாகத்தின் திறந்தவெளி பகுதியில் அந்த பை கிடந்துள்ளது. அதனை கைப்பற்றி பெண்ணிடம் ஒப்படைத்தனர்.

நகை பையில் உள்ள பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும். அதனை பெற்ற பின்னரே அவர் நிம்மதி பெருமூச்சு விட்டார். மத்திய பிரதேசத்தில் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான நகையை பையோடு திருடி சென்ற நாயால் பரபரப்பு ஏற்பட்டது.