தேசிய செய்திகள்

நிலம், சுரங்கம் மற்றும் மணல் மாபியாக்களின் கூடாரம் ஜார்கண்ட்: முன்னாள் முதல்-மந்திரி குற்றச்சாட்டு

காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாராவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முழுமையாக விசாரிக்க வேண்டும். கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ராஞ்சி

ஜார்கண்ட் மாநிலம் நிலம், சுரங்கம் மற்றும் மணல் மாபியாக்களின் கூடாரம் போல் ஆகி விட்டது என்று முன்னாள் முதல்-மந்திரி குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பூஷண் பாரா. இந்நிலையில், அவருடைய வீட்டில் வேலை செய்து வந்த 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, அவருக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

பாலியல் வன்கொடுமை

இதில், கடந்த மே மாதத்தில் படிக்க வைக்கிறோம் என கூறி, சிறுமியை ராஞ்சிக்கு அழைத்து வந்த எம்.எல்.ஏ. குடும்பத்தினர் அதன்படி செயல்டாமல், வீட்டு வேலை செய்ய வைத்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஆகஸ்டில் சிறுமியை வீட்டில் வைத்து பாரா பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என கூறப்படுகிறது.

இதில் சிறுமி கர்ப்பிணியானார் என்றும் பின்னர் கர்ப்பம் கலைந்தது என்பது மருத்துவ பரிசோதனையில் உறுதியானது என்றும் சிறுமி தன்னுடைய குற்றச்சாட்டாக கூறியுள்ளார். ஜார்கண்டில், ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது.

பா.ஜ.க. கண்டனம்

இந்த சம்பவத்திற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் வெளியிட்டு உள்ளது. பாராவை உடனடியாக கைது செய்யவும் வலியுறுத்தியது.

இந்நிலையில், முன்னாள் முதல்-மந்திரி மது கோடா இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, ஜார்கண்ட் மாநிலம் ஆனது நிலம், சுரங்கம் மற்றும் மணல் மாபியாக்களின் கூடாரம் போல் ஆகி விட்டது என்று குற்றச்சாட்டாக கூறினார்.

கடுமையான நடவடிக்கை

இந்த மாபியா ராஜ்ஜியத்தில் ஊழலும் சேர்ந்து விட்டது. பெண்கள் மற்றும் சிறுமிகளின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பு ஆகியவை இன்று பாதுகாக்கப்படுவதில்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாராவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முழுமையாக விசாரிக்க வேண்டும். கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதற்கு காங்கிரஸ் கட்சி ஏதேனும் பொறுப்பேற்கும் என்றால், உடனடியாக அவரை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து விலக செய்ய வேண்டும் என கூறினார்.

SCROLL FOR NEXT