தேசிய செய்திகள்

ஜார்க்கண்ட்: இரும்பு உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - 3 பேர் பலி

தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டம் ஹிலால் பகுதியில் இரும்பு உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது.

தீ விபத்து

இந்த ஆலையில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஆலையின் கேப்டிவ் பவர் பிளாட் பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 4 ஊழியர்கள் சிக்கிக்கொண்டனர்.

இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று ஆலையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

மேலும், தீ விபத்தில் சிக்கிய 4 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 3 ஊழியர்கள் உயிரிழந்தனர்.

உயிரிழந்த 3 ஊழியர்களும் ஆலையில் பணியாற்றி வந்த என்ஜினியர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், இந்த தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.