ராஞ்சி
ஜார்கண்ட் மாநில அரசு பணியாளர் நியமன தேர்வை ரத்து செய்து முதல்-மந்திரி பிறப்பித்த உத்தரவுக்கு மாணவர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
ஜார்கண்ட் மாநிலத்தில் அரசு பணியாளர் நியமன தேர்வில் முறைகேடு நடந்துள்ளது என குற்றச்சாட்டு கூறி மாணவர்கள் அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டது. 24 நாட்களாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், உண்ணாவிரத போராட்டத்திலும் மாணவர்கள் ஈடுபட்டனர்.
அந்த மாநிலத்தின் அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட ஜே.எஸ்.எஸ்.சி.-சி.ஜி.எல். தேர்வில் முறைகேடு நடந்துள்ளது என்றும் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தம் தேவை என்றும் அப்போது வலியுறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து, ஆளும் அரசுக்கு எதிராக தங்களது எதிர்ப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஹேமந்த் சோரன், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரின் உருவ பொம்மைகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர்கள் எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்த போராட்டம் தொடர்ச்சியாக மாநிலத்தின் அரசு இறங்கி வந்துள்ளது. மாணவர்களின் தொடர் போராட்டம் எதிரொலியாக, அரசு பணியாளர் நியமன தேர்வை ரத்து செய்து முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் உத்தரவிட்டார்.
அதனுடன், டேட்டா புராசஸிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தொடர்புடைய அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுகின்றன.
இதேபோன்று போராட்ட பகுதிக்கு மாநில மந்திரிகள் தீபிகா பாண்டே சிங், இர்பான் அன்சாரி ஆகியோர் நேரில் சென்று மாணவர்களுடன் உரையாடினர். இதனால், 16 நாட்களாக நடந்து வந்த உண்ணாவிரத போராட்டம் முடித்து கொள்ளப்படுகிறது என மாணவர்கள் தெரிவித்தனர்.
அரசின் இந்த உத்தரவுக்கு மாணவர் தலைவர் தேவேந்திர நாத் மகதோ வரவேற்பு தெரிவித்து உள்ளார். அரசின் இந்த முடிவை வரவேற்று அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, சோரன், மாநில நிர்வாகம், காவல் துறை, ஊடகம், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்ட அவர், நடந்து வரும் முயற்சிகளுக்கு மாணவர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அப்போது கேட்டு கொண்டார்.
எதிர்காலத்தில், வினாத்தாள் கசிவுகளை தடுக்கும் வகையில் தேர்வு கட்டமைப்புகளில் சீர்திருத்தம் மற்றும் பிற முறைகேடுகளை தடுக்க வேண்டியது தேவை என அப்போது அவர் வலியுறுத்தினார். இதேபோன்று இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.