தேசிய செய்திகள்

இந்தியாவின் ஜனநாயக நிறுவனங்களை வெளிநாட்டில் அவமதிக்கும் ராகுல் - பாஜக கண்டனம்

முறைகேடுகள் நடக்கிறது என்பதற்காக தேர்தலை புறக்கணிப்பது ஜனநாயகத்தை சீரழித்து விடும் என ராகுல்காந்தி கூறியுள்ளார்.

மும்பை,

காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித்தலைவருமான ராகுல் காந்தி சிகாகோ பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது இந்தியாவில் தேர்தல்களில் முறைகேடுகள் நடந்து வருவதாக சாடினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

எங்களை பொறுத்தவரை இந்திய ஜனநாயகம் புனிதமானது. இந்திய ஜனநாயகத்தில் ஒரு சிக்கல் இருக்கிறது என்று சொல்வதற்கே 100, 200, 300 சதவீத ஆதாரம் இல்லாமல் எனக்குக் கடினமாக இருக்கிறது.சரி, தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று நாம் எதிர்க்கட்சித் தொண்டர்களிடம் சொன்னால் அவர்களுக்கு என்ன ஆகும்? நாம் தேர்தலில் போட் டியிடப் போவதில்லை என்று சொன்னால், அந்த நிமிடமே இந்திய ஜனநாயகத்துக்கு நாம் முடிவுரை எழுதி விடுவோம்.

முறைகேடுகள் நடப்பதற்காக தேர்தலில் போட்டியிடாமல் தவிர்ப்பது ஜனநாயகத்தை சீரழித்து விடும் என்பதால் இந்திய ஜனநாயகத்தின் கட்டமைப்பை நாங்கள் சிதைக்க விரும்பவில்லை.

நாட்டின் தேர்தல் கட்டமைப்பை உடைக்க எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை. தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என எதிர்க்கட்சிகள் உறுதியாக இருந்தால், பின்னர் இந்திய மக்களின் மனதில் அது சட்டவிரோதமானதாக மாறி விடும்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்தியாவின் ஜனநாயக நிறுவனங்களை வெளிநாட்டு மண்ணில் இருந்து கொண்டு அவமதிப்பதாக மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு குற்றம் சாட்டியுள்ளார். நாட்டில் ஜனநாயக சுதந்திரம் இல்லையென்றால் எதிர்க்கட்சிகளால் எப்படி போராட முடியும்? என கேள்வியும் எழுப்பி யுள்ளார்

SCROLL FOR NEXT