தேசிய செய்திகள்

டெல்லியில் நீதிபதி தூக்கு போட்டு தற்கொலை; உருக்கமான கடிதம் சிக்கியது

தெற்கு டெல்லி சப்தர்ஜங் பகுதியில் உள்ள கிரீன் பார்க் இல்லத்தில் வசித்து வந்தவர் அமன்குமார் ஷர்மா (வயது 30). நீதிபதியாக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று அமன்குமார் ஷர்மா, தனது வீட்டில் உள்ள குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.இதுபற்றி அவரது மைத்துனர் சிவம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு விரைந்து வந்தனர். குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட நீதிபதி அமன்குமார் ஷர்மாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்

இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டாலும், பல்வேறு கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அமன்குமார் ஷர்மா 2021-ம் ஆண்டு ஜூன் 19-ந்தேதி டெல்லி நீதித்துறை சேவையில் சேர்ந்தார். புனேவில் உள்ள சிம்பயோசிஸ் சட்டப் பள்ளியில் பட்டம் பெற்று, 2018-ல் பி.ஏ. எல்.எல்.பி. படிப்பை முடித்தார்.

தனது பதவிக்காலத்தில், அவர் பலதரப்பட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்குகளை கையாண்டதுடன், முதல் வகுப்பு நீதித்துறை நடுவராகவும், உரிமையியல் நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.நீதிபதி அமன்குமார் ஷர்மா தற்கொலை செய்வதற்கு முன்பு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினார்கள். அதில், ‘எனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை. மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்கிறேன்’ என்று கூறியிருந்தார். அந்த கடிதத்தில் இருப்பது அவரது கையெழுத்துதானா என்பதை அறிய அதை தடயவியல் சோதனைக்கு போலீசார் அனுப்பியுள்ளனர்.

மேலும் நீதிபதி அமன்குமார் ஷர்மா தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது பல்வேறு தகவல்கள் கிடைத்தன. அதன் விவரம் வருமாறு:-அமன்குமார் ஷர்மா தற்கொலை செய்வதற்கு முந்தைய நாள் இரவு 10 மணியளவில் தனது தந்தையுடன் செல்போனில் பேசியுள்ளார். அப்போது ‘நான் வீட்டில் மனரீதியாக துன்புறுத்தப்படுகிறேன். இதனால் மிகவும் கலக்கமாக இருக்கிறேன், என்னால் வாழ்வதே கடினமாகி விட்டது’ என்று கூறியுள்ளார். இதையடுத்து அவரது தந்தை உடனடியாக கிளம்பி அங்கு சென்றுள்ளார்.

கடந்த 2 மாதங்களாக அமன்குமாருக்கும், அவரது மனைவிக்கும் பிரச்சினைகள் இருந்துள்ளன. அவரது மனைவியும் ஒரு நீதித்துறை அதிகாரி ஆவார். கணவன் - மனைவி பிரச்சினையை தீர்ப்பதற்காக மனைவி தரப்பில் இருந்து ஒரு உறவினரை அழைத்துள்ளார். ஆனால் அவர் தன்னால் தலையிட முடியாது என்று கூறிவிட்டு சென்றார்.சம்பவத்தன்று வீட்டிற்குள் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. அதன்பிறகு அமன்குமார் ஒரு அறையிலும், அவரது மனைவி மற்றொரு அறையிலும் இருந்துள்ளனர்.

அப்போது அமன்குமார் அழுதுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அமன்குமார் ஷர்மாவை காணவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அது குளியலறையில் இருந்து ஒலித்தது. அதன்பின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே பார்த்தனர். அப்போது ஒரு துணியை பயன்படுத்தி அமன்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களிடம் விசாரித்து வருகின்றனர். ஆனாலும் தற்கொலைக்கான உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.