தேசிய செய்திகள்

விவாகரத்து பெற்று வந்த மகளை மேளதாளம் முழங்க வரவேற்ற நீதிபதி... வினோத சம்பவம்

பிரணிதாவுக்கு ராணுவ மேஜருடன் திருமணம் நடந்தது.

மீரட்,

உத்தரபிரேதச மாநிலம் மீரட் நகரை சேர்ந் தவர் ஓய்வு பெற்ற நீதிபதி ஞானேந்திர குமார் சர்மா. இவரது மகள் பிரணிதா வசிஷ்டா. இவருக்கு கடந்த 2018-ம் ஆண்டு ஷாஜகான்பூரை சேர்ந்த ஒரு ராணுவ மேஜருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் கணவர் வீட்டில் பிரணிதாவுக்கு தொடர்ந்து மன ரீதியான, உடல்ரீதியான துன்புறுத்தல் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து பிரணிதா மீரட் குடும்ப கோர்ட்டில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். பிரணிதாவுக்கு நேற்று முன்தினம் விவாகரத்து கிடைத்தது.

பிரணிதா கோர்ட்டு வளாகத்தில் இருந்து வெளியே வந்த போது உறவினர்கள் மேளதாளங்களுக்கு ஏற்ப நடனமாடி. ஒரு ஊர்வலமாக அவரை வீட்டுக்கு அழைத்து சென்றனர். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், 'நான் என் மகளை நேசிக்கிறேன்' என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கருப்பு நிற டீ-சர்ட் அணிந்திருந்தனர். ஓய்வுபெற்ற நீதிபதி ஞானேந்திர குமார் சர்மா தன் மகளுக்கு மாலைகள் அணிவித்து வரவேற்றதுடன், உறவினர்களுக்கு இனிப்புகளையும் வினியோகித்தார்.

இதுகுறித்து ஞானேந்திர குமார் சர்மா கூறும்போது, “என் மகள் திருமண வாழ்வில் மகிழ்ச்சியாக இல்லையென்றால், அவளை அந்த சூழலில் இருந்து வெளியே கொண்டு வருவது என் கடமையாகும். நாங்கள் ஜீவனாம்சமோ அல்லது வேறு எதையுமோ கோரவில்லை. மகள்கள் என்பவர்கள் உடைமைகள் அல்ல. சமூக எதிர்பார்ப்புகளைவிட அவர்களின் மகிழ்ச்சிக்கும், கண்ணியத்துக்கும் தான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்" என தெரிவித்தார்.

பிரணிதா கூறும்போது, "திருமண பந்தத்தில் மனதளவில் மிகவும் பலவீனமடைந்து இருந்தேன். துன்புறுத்தலை எதிர்கொள்ளும் பெண்கள் மவுனமாக இருக்க வேண்டாம். உங்களுக்காக நீங்களே எழுந்து நில்லுங்கள். திருமணத்தை பற்றி யோசிப்பதற்கு முன்பு வலிமை பெறுங்கள், கல்வியறிவு பெறுங்கள், சுதந்திரமாக இருங்கள்” என்றார்.