தேசிய செய்திகள்

கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு: விவாகரத்து மனுவை கிழித்து கணவரை கட்டிப்பிடித்த மனைவி

தன் மாமனாரை ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சைக்கு தேவையான பணத்தை செலவழித்துள்ளார்.

புதுடெல்லி,

‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற கலாச்சார பெருமைமிக்க இந்தியாவில், இப்போதெல்லாம் அற்ப காரணங்களுக்காக விவாகரத்து கோருவது என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. ஜாதகம், ஜோசியம் என பொருத்தம் பார்த்து, பணத்தை வாரியிறைத்து திருமணம் செய்து கொள்ளும் இளம்ஜோடிகளில் பலர், தேனிலவுக்கு செல்லும் இடத்தில்கூட பரஸ்பர புரிதல் இல்லாமல் சண்டை போட்டு பிரிந்து செல்லும் விநோதம் அரங்கேறி வருகிறது.

பெரும்பாலும் திருமணமான 3 மாதங்களில் ஆரம்பித்து, 3 ஆண்டுகளுக்குள் திருமண வாழ்க்கை கசந்த தம்பதியரே அதிக எண்ணிக்கையில் நீதிமன்ற படியேறி தீர்வு கிடைக்காமல் ஆண்டுக்கணக்கில் அலைந்து வருகின்றனர். இதனால் எந்த நீதிமன்றங்களிலும் இல்லாத அளவுக்கு 35 வயதுக்கு குறைவான திருமணமான இளம் தம்பதியரின் கூட்டத்தை குடும்ப நல நீதிமன்றங்களில் அதிகமாகக் காண முடிகிறது.

விவகாரத்து

இந்தநிலையில், ஒரு ஜோடி விவாகரத்து பெறுவதற்கு முன்பு ஒன்று சேர்ந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது அதுவும் கோர்ட்டு வளாகத்தில் விவாகரத்து மனுவை கிழித்து கணவரை ஓடிபோய் கட்டிப்பிடித்து மனைவி கண்ணீர் விட்டு அழும் காட்சி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

கொரோனா பலரது வாழ்க்கையை பலவேறு வகையில் மாற்றியது என்றே சொல்லலாம். குறிப்பாக, திருமணமனாவர்களின் வாழ்வு பெரும் மாற்றத்தை எதிர்கொண்டது. இந்த பேரிடர் காரணமாக பலரும் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதனால், தினம் ஒரு திசையாக அலுவலத்திற்கு சென்று வந்தவர்கள், ஒரே வீட்டில் ஒன்றாக எல்லா நேரங்களிலும் இருக்க வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டது.

வீட்டிலிருந்து வேலை, வெளியில் எங்கும் போக முடியாத நிலை பல பேரை அதிகம் சண்டையிட செய்தது. இதில் பல பேர் விவாகரத்து பெறும் நிலைக்கும் தள்ளப்பட்டனர்.

டெல்லியிலும், ஒரு ஜோடி பிரியும் நிலை வரை சென்றுள்ளனர். இவர்கள், விவாகரத்து வாங்குவதற்கு சில நிமிடங்கள் இருக்கும் வேலையில், தங்கள் திருமணத்திற்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்து பார்ப்போம் என முடிவெடுத்து ஒன்றாக சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர்.

பாச மழை

இவர்கள், தங்களின் விவாகரத்து பெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, தங்களின் விவாகரத்து பேப்பரை கிழித்துப்போட்டு விட்டு, இறுக்கமாக கட்டிப்பிடித்து பாச மழை பொழிந்துகொண்டனர்.

இதில், விவாகரத்து பெற விரும்பிய மனைவியின் பெயர் சிக்கா சிங். இவருக்கு, 2020ல் திருமணம் நடந்துள்ளது. இதற்கு சில நாட்களில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட தொடங்கி உள்ளது. நாளுக்கு நாள் இருவருக்கும் இடையே இடைவெளி அதிகமானது. வரதட்சனை கொடுமை என்கிற வழக்கும், அந்த பெண்ணின் கணவர் மீது பாய்ந்துள்ளது.

மானாருக்கு உதவி

சிக்காவின் தந்தைக்கு விவாகரத்து வழக்கு நடந்து வந்த சமயத்தில் நிதி ரீதியாக பலவித பிரச்சினை இருந்திருக்கிறது. இதையடுத்து மகளின் வழக்கறிஞருக்கு பணம் கொடுக்க முடியாமலும், தன் சொந்த மருத்துவ தேவைக்கு பணம் கொடுக்க முடியாமலும் இருந்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து ஒரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இதைக்கேட்டவுடன், அந்த பெண்ணின் கணவர் இருந்த மனைவி மீது உள்ள பாசத்தால் பிரச்சினைகளையெல்லாம் மறந்துவிட்டு மாமனாரை பார்க்க ஓடோடி சென்றிருக்கிறார். உடனடியாக தன் மாமனாரை ஒரு தனியார் மருத்துவமனைக்கும் மாற்றி சிகிச்சைக்கு தேவையான பணத்தை செலவழித்துள்ளார். இப்போது அவர் நலமுடன் உள்ளார். இந்த விவகாரம் சிக்காவிற்கு தெரிய வந்ததையடுத்து கதறி அழுத்துள்ளார். கணவரை தவறாக நினைத்துவிட்டோமே என்று நினைத்து வருந்தி உள்ளார்.

கோர்ட்டு வளாகம்

இதற்கெல்லாம் பிறகு, இந்த விவாகரத்து வழக்கின் ஹியரிங் நடைப்பெற இருந்திருக்கிறது. அப்போது, தன் கணவரை பார்த்த பின்பு உடைந்து அழுத சிக்கா, அந்த விவாகரத்து பேப்பர்களை கிழித்து போட்டு அவரை ஓடிப்போய் கட்டிப்பிடித்திருக்கிறார்.

இந்த வீடியோ, தற்போது இணையத்தில் செம வைரலாக வைரலாகி வருகிறது. பலரும், இதற்கு ஹார்டின் விட்டு வருவதோடு, அவர்கள் இப்படியே நீண்ட நாள் வாழ வேண்டும் என்று ஆசிர்வாதம் கூறியும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.