புதுடெல்லி,
4 நாட்கள் பயணமாக கடந்த 27 முதல் 29-ந் தேதி வரை செசல்ஸ் சென்றிருந்த பிரதமர் நரேந்திரமோடி, அந்த நாட்டின் தேசிய தின பொன்விழா கொண்டாட்டங்களில் கலந்துகொண்டார். மேலும், அந்நாட்டின் அதிபர் பேட்ரிக் ஹெர்மினியுடன் பேச்சு வார்த்தை நடத்தி, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தினார்.
இந்த 4 நாட்கள் பயணத்தின்போது, செசல்ஸ் நாட்டின் உயர்மட்ட தலைவர்களுக்கும், அவர்களின் துணைவியாருக்கும் பிரதமர் நரேந்திரமோடி அளித்த பரிசுகளில், காஞ்சீபுரம் பட்டு, மகேஸ்வரி பட்டு, தோடா பழங்குடியினர் தயாரித்த சால்வை, முராதாபாத் பித்தளை ஆமை சிலை ஆகியவை இடம்பெற்றிருந்தன.
குறிப்பாக, அந்நாட்டின் அதிபர் பேட்ரிக் ஹெர்மினியின் மனைவி வெரோனிக்குக்கு மகேஸ்வரி பட்டு, கர்நாடகாவை சேர்ந்த பழங்கால உலோகக் கைவினை பொருட்கள் அடங்கிய பெட்டி ஆகியவற்றை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.
அதேபோல், செசல்ஸ் துணை ஜனாதிபதி செபாஸ்டியன் பிள்ளைக்கு சிக்கிமில் இருந்து கொண்டு சென்ற ஓவியத்தை பிரதமர் மோடி பரிசளித்தார். இதில், மகேஸ்வரி பட்டு என்பது மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மகேஷ்வரில் நெசவு மூலம் நுணுக்கமான கைவினை வேலைப்பாடுடன் நெய்யப்பட்ட பட்டாகும்.