டெல்லி,
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை திமுக எம்.பி. கனிமொழி சந்தித்தார்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறையுடன் கூடிய நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மசோதா கடந்த ஏப்ரல் மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வாக்கெடுப்பில் போதிய ஆதரவு இல்லாததால் மசோதா தோல்வியடைந்தது.
இதனிடையே, இந்த மசோதாவை நாளை மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாக திமுக பகிரங்கமாக தெரிவித்துள்ளது. ஆரம்பம் முதல் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த திமுக தற்போது ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளது. அதன்படி, டெல்லியில் நேற்று உள்துறை மந்திரி அமித்ஷாவை திமுக துணைப்பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி எம்.பி. சந்தித்து தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்தார்.
இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை திமுக எம்.பி. கனிமொழி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான தங்கள் நிலைப்பாட்டை மல்லிகார்ஜுன கார்கேவிடம் கனிமொழி விளக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.