கான்பூர்,
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், குப்பை கிடங்கில் கொட்டப்பட்ட காலாவதியான சாக்லேட்டுகளை பொதுமக்கள் போட்டி போட்டு அள்ளிச்சென்ற அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கான்பூர் பங்கி தொழில்பேட்டை பகுதியில் உள்ள ஒரு பிரபல சாக்லேட் தயாரிப்பு நிறுவனம், தங்களின் 2024-ஆம் ஆண்டோடு காலாவதியான சாக்லேட் மற்றும் மிட்டாய் பெட்டிகளை சாலை ஓரத்திலிருந்த குப்பை கிடங்கில் கொட்டியுள்ளது.
குப்பையில் சாக்லேட் பெட்டிகள் கொட்டிக்கிடக்கும் தகவல் காட்டுத்தீ போல பரவியதை அடுத்து, சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டனர். குப்பை என்றும் பாராமல், போட்டி போட்டுக்கொண்டு தங்களின் கைகள், பைகள் மற்றும் சாக்கு மூட்டைகளில் சாக்லேட்டுகளை அள்ளி சென்றனர். சிலர் இருசக்கர வாகனங்களிலும், மிதிவண்டிகளிலும் பெட்டி பெட்டியாக இவற்றை ஏற்றி சென்ற காட்சி காண்போரை அதிர்ச்சியடைய வைத்தது.
இந்த சாக்லேட்டுகள் அனைத்தும் ஏற்கனவே காலாவதியானவை என்பதால், இவற்றை சாப்பிடும் குழந்தைகளுக்கு கடுமையான உடல்நலக்குறைவு மற்றும் உணவு நச்சுத்தன்மை ஏற்படக்கூடும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானதை அடுத்து கான்பூர் காவல்துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொது இடங்களில் காலாவதியான உணவு பொருட்களை பாதுகாப்பற்ற முறையில் கொட்டிய தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலவசமாக கிடைக்கிறது என்பதற்காக காலாவதி தேதியை கூட பார்க்காமல், குப்பையிலிருந்து மிட்டாய்களை அள்ளி சென்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.