கான்பூர்,
பிரதமர் மோடியை வடகொரியா சர்வாதிகாரியான கிம் ஜாங் அன்னுடன் ஒப்பிட்டு வாசகம் அடங்கிய போஸ்டர்கள் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ஒட்டப்பட்டு உள்ளது, இதுதொடர்பாக போலீசார் 22 வணிகர்களுக்கு எதிராக போலீசார் கிரிமினல் வழக்கை பதிவு செய்து உள்ளனர். போஸ்டர்கள் ஒட்டப்பட்டது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பிரவின் குமார் என்பவரை போலீஸ் கைது செய்து உள்ளது. விரைவில் மீதம் உள்ளவர்களையும் கைது செய்வோம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே வணிகர்கள் தரப்பில் கைது நடவடிக்கையை அடுத்து இவ்வருடம் தீபாவளியை கொண்டாடப்போவது இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு ஆகியவற்றால் இந்திய பொருளாதாரம் மேலும் சரிவை சந்தித்து உள்ளது என விமர்சனம் எழுந்து உள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்து உள்ளது. இந்தநிலையில் கான்பூரில் பிரதமர் மோடியை, வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன்னுடன் ஒப்புட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது. அந்த போஸ்டரில் ஒரு புறத்தில் கிம் படமும், மற்றொரு புறத்தில் மோடியின் படமும் இருக்கிறது. போஸ்டர்களில் உலகத்தை அழிக்காமல் ஓயமாட்டேன் என கிம் சொல்வது போன்றும், வியாபாரத்தை அழிக்காமல் விடமாட்டேன் என்று பிரதமர் மோடி சொல்வது போல் வாசகம் இடம் பெற்று உள்ளது.
கான்பூரில் வங்கிகள் சில்லரை காசுகளை டெபாசிட் செய்ய அனுமதிக்காததை கண்டித்து வணிகர்கள் தரப்பில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. போஸ்டர்கள் ஒட்டப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரித்து வருகிறது. சில்லரை காசுகளை டெபாசிட் செய்ய முடியாததால், அதனை நாங்களே பாரமாக வைத்திருக்க வேண்டியது உள்ளது எனவும் வணிகர்கள் தரபில் தெரிவிக்கப்படுகிறது. கான்பூரில் சுமார் ரூ. 200 கோடி அளவில் சில்லரை காசுகள் புழக்கத்தில் இருப்பதாக தகவல்கள் கூறுகிறது.
இந்த நிலையால் வர்த்தகர்கள் தங்களுடைய தொழிலாளர்களுக்கு சில்லரை காசுக்களை சம்பளமாக கொடுக்க வேண்டியது உள்ளது. சில்லரை காசுக்களை வங்கிகள் மற்றும் கடைக்காரர்கள் வாங்க மறுப்பது காரணமாக அவர்கள் பணத்தை பயன்படுத்த முடியவில்லை. இந்த பிரச்சனை தீர்க்கப்படவில்லை என்றால் எங்களுடைய தொழிலை நாங்கள் விடவேண்டிய சூழ்நிலைதான் வரும் என வணிகர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. சில்லரை காசு விவகாரத்தினால் எங்களுடைய வர்த்தகம் பாதிக்கிறது, பல்வேறு நிலையில் கோரிக்கை வைக்கப்பட்டும் பலன் கிடையாது, எனவே அரசுக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலே போஸ்டர்கள் ஒட்டப்பட்டது எனவும் அவர்கள் தரப்பில் குறிப்பிடப்படுகிறது.