பெங்களூரு,
மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்றும், தமிழகத்துக்கு காவிரியில் நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்தும் கர்நாடகத்தில் இன்று நடத்தப்பட்ட பந்த் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
காவிரி நதிநீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. கர்நாடகத்தில் இந்த ஆண்டு கடந்த ஜூலை மாதம் போதிய அளவு பருவ மழை பெய்ய வில்லை. இதனால் காவிரி படுகையில் உள்ள அணைகள் நிரம்பவில்லை. இதற்கிடையே, கடந்த மாதம் (ஜூலை) தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு 3,500 கனஅடி தண்ணீர் திறந்து விட கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
இதற்கு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தன. குறிப்பாக கன்னட கூட்டமைப்புகளின் தலைவரான வாட்டாள் நாகராஜ், காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்டு 13-ந் தேதி (அதாவது இன்று) பந்த் நடத்த அழைப்பு விடுத்தார். இதற்கு பல்வேறு கன்னட அமைப்புகள், வாடகை கார், ஆட்டோ ஓட்டுனர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தது.
கர்நாடகாவில் பந்த் நடத்த கடந்த மாதம் 31-ந் தேதி அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு, காவிரி படுகையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜசாகர்) அணை தவிர்த்து மற்ற 3 அணைகளும் (கபினி, ஹாரங்கி, ஹேமாவதி) நிரம்பும் தருவாயில் உள்ளது. அணைகளுக்கு தண்ணீர் வரத்தும் அதிகரித்துள்ளதால், காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கர்நாடகத் தில் இன்று (வியாழக்கிழமை) திட்டமிட்டபடி பந்த் நடைபெறுமா?, இல்லையா? என்ற கேள்வி எழுந்தது.
அதே நேரத்தில் நேற்று முன்தினம் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடுவதற்கு கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதற்கு கர்நாடக அரசியல் கட்சி தலைவர்கள், கன்னட அமைப்புகளை சேர்ந்தவர்கள், விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து திட்டமிட்டபடி பந்த் நடக்கும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் தரக் கூடாது என கூறி கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் சார்பில் பந்த் நடைபெற்றது. இதன்படி மைசூரு, கொப்பால், அத்திப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தினர். ஓசூர் வழியாக பெங்களூருவுக்கு தமிழ்நாட்டு பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.
கன்னட அமைப்புகள் போராட்டம் காரணமாக நீலகிரியில் இருந்து கர்நாடகாவுக்கு இயக்கப்படும் அரசுபஸ் சேவை நிறுத்தப்பட்டது. எனினும், அம்மாநில அரசுபஸ்கள் வழக்கம்போல நீலகிரி மாவட்டத்திற்கு இயக்கப்பட்டு வந்தன.
இரு மாநில தனியார் வாகனங்களும் எந்த தடையும் இன்றி சென்று வருகின்றன. முன்னதாக ஈரோட்டில் இருந்து கர்நாடகத்துக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் முன்னெச்சரிக்கையாக ரத்து செய்யப்பட்டன
இந்நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இதன்படி பந்த் வாபஸ் பெறப்படுவதாக அம்மாநில முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார். மேலும் விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தமிழ்நாட்டிற்கு நீர் தரக் கூடாது என வாட்டாள் நாகராஜ் தலைமையில் பல்வேறு கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.