தேசிய செய்திகள்

கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் திடீர் டெல்லி பயணம்

மந்திரிசபை மாற்றம் குறித்து ஆலோசிக்க முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் கடந்த 3-ந் தேதி நடைபெற்றது. புதிதாக 19 பேர் மந்திரிகள் பதவி ஏற்றனர். இதனால் மந்திரி பதவி கிடைக்காத மூத்த எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாக எம்.எல்.ஏ.க்கள் கிருஷ்ணப்பா, தினேஷ் குண்டுராவ், எச்.கே.பட்டீல் உள்ளிட்ட சிலரை சமாதானப்படுத்த முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தீவிர முயற்சி மேற்கொண்டார். ஆனால் அவர்கள் சமாதானம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து மந்திரிசபையில் சிறிய மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆலோசிக்க முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் இன்று மாலை டெல்லி பயணம் மேற்கொண்டார். மாலை 5 மணிக்கு அவர் விமானம் மூலம் டெல்லி சென்றார். அங்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து அவர் பேச உள்ளார்.

மழைக்கால கூட்டத்தொடர்

மந்திரிகள் ரிஸ்வான் ஹர்ஷத், சிவராஜ் தங்கடகி உள்ளிட்ட சிலர் டெல்லி சென்றுள்ளனர். இந்த மந்திரிசபை மாற்றம் குறித்த தகவலால் புதிதாக மந்திரி பதவிக்கு வந்துள்ள சிலருக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது. தங்களின் மந்திரி பதவியை பறித்து விடுவார்களோ என்ற ஆதங்கம் அவர்களை சூழ்ந்து கொண்டுள்ளது. மந்திரிசபையில் சிறிய மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதால்தான் புதிய மந்திரிகளுக்கு இன்னும் இலாகா ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

வருகிற 13-ந் தேதி சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளதால் அதற்குள் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர டி.கே.சிவக்குமார் முயற்சி செய்து வருகிறார். அனேகமாக செவ்வாய்க்கிழமை மந்திரிசபை மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2, 3 பேரை நீக்கிவிட்டு அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை மந்திரிசபையில் சேர்த்துக்கொள்ள பேச்சுகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் பெண் எம்.எல்.ஏ.க்களில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.