தேசிய செய்திகள்

கர்நாடகா: நில தகராறு தொடர்பாக பஞ்சாயத்து பேசும்போது 6 பேரை படுகொலை செய்த கும்பல்

பஞ்சாயத்துக்கு ரேவணசித்தப்பாவின் குடும்பத்தினர் மற்றும் அப்பு கவுடாவின் குடும்பத்தினர் நேற்று வந்துள்ளனர்.

பெங்களூரு

கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் சடச்சனா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கோவிந்தாப்புரா கிராமத்தில் வசித்து வந்தவர் அப்பு கவுடா. அதே கிராமத்தில் ரேவணசித்தப்பா என்பவரும் வசித்து வருகிறார். 10 ஏக்கர் நிலம் தொடர்பாக இந்த 2 பேர் குடும்பத்தினருக்கும் இடையே பல ஆண்டுகளாக தகராறு இருந்த வந்துள்ளது.

இந்த பஞ்சாயத்துக்கு ரேவணசித்தப்பாவின் குடும்பத்தினர் மற்றும் அப்பு கவுடாவின் குடும்பத்தினரும் நேற்று வந்துள்ளனர். இருதரப்பு பேச்சுவார்த்தையும் நடந்து கொண்டிருந்தது. அப்போது அப்புகவுடா மற்றும் அவரது குடும்பத்தினரின் கோரிக்கையை ரேவணசித்தப்பாவும், அவரது குடும்பத்தினரும் ஏற்கவில்லை. இதனால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.

இதனால் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் கடும் கோபமும், ஆத்திரமும் அடைந்த அப்புகவுடாவும், அவரது தரப்பினரும் ஏற்கனவே திட்டம் தீட்டியபடி மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் ரேவணசித்தப்பா மற்றும் அவரது தரப்பினரை தாக்கினர். அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்தினர். மேலும் துப்பாக்கியாலும் அவர்களை நோக்கி சுட்டனர்.

இதில் ரேவணசித்தப்பாவின் குடும்பத்தினரான துண்டப்பா (வயது 65), சிவ புத்ரா (58), சந்திரகாந்த் (55), சிவபுத்ராவின் மகன்கள் ராகுல் (25), சமர்த் (23) மற்றும் தோட்ட வேலைக்காரன் சபீர் பாபுசாப் (45) ஆகிய 6 பேர் கொல்லப்பட்டனர். அரவிந்த் யஷ்வந்த் (72) மற்றும் சந்தீப் பாரத் மானே (33) ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதன்பின்னர் அப்பு கவுடாவும், அவரது குடும்பத்தினரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்புகவுடா தரப்பை சேர்ந்த சசிகாந்த், பிரசாந்த், ரமேஷ், சங்கப்பா, மகாதேவா ஆகிய 5 பேரை தேடி வருகிறார்கள். காயம் அடைந்த 2 பேரும் மாவட்ட அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.