தேசிய செய்திகள்

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு கூடுதல் மனு தாக்கல்

காவிரி விவகார தீர்ப்பின் படி தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரின் அளவைவிட கூடுதலாக எடுத்துக்கொள்ள உரிமை கிடையாது என்று கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த கூடுதல் மனுவில் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது.

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம்

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

காவிரி விவகார தீர்ப்பின் படி தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரின் அளவைவிட கூடுதலாக எடுத்துக்கொள்ள உரிமை கிடையாது. எனவே காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற அனுமதி அளிக்கக்கூடாது. அது மட்டுமல்லாமல் காவிரியின் குறுக்கே எந்த நீர் திட்டங்களையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்த அனுமதிக்கக்கூடாது. மேலும் காவிரியில் பங்கீடு செய்யப்பட்ட மொத்த நீருக்கு மேல் இரு மாநில எல்லையான பில்லிகுண்டுலுவுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள நீர் கர்நாடகத்துக்கு உரிமையானது என ஏற்கனவே தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, கர்நாடகத்துக்கான நீரை மடை மாற்றி சேகரிக்கும் வகையில் அமையவுள்ள காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும்.

தமிழக அரசுக்கு நிரந்தர தடை

குறிப்பாக மேட்டூரில் இருந்து உபரி நீரை சேலம் மாவட்டத்தில் உள்ள வறண்ட ஏரிகளில் சேகரிக்கும் சரபங்கா திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். புது கட்டளை நீர் பாசன திட்டம், ஆதனூரில் கொள்ளிடத்துக்கு குறுக்கே தடுப்பணை கட்ட தடை விதிக்க வேண்டும். கரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், நாமக்கல், குளித்தலை, முசிறி, சீர்காழி, உள்ளிட்ட இடங்களில் தடுப்பணைகள் திட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும். அதேபோல ராஜவாய்கால் வடிகால் நீர் பாசன திட்டம், நொய்யல் ஆறு நீர் திட்டம், கல்லணை வடிகால் நீர் திட்டம், தடுப்பணைகள் கட்டப்படுவதும் தடுக்கப்பட வேண்டும். எனவே, இதுபோன்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த நிரந்த தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டும். காவிரியில் வரும் உபரி நீரை சேகரிக்கும் வண்ணம் காவிரி- குண்டாறு- வைகை நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது.

சட்ட விரோதமான திட்டம்

சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் நடைபெற்ற வழக்கில் இந்த நதிகள் இணைப்பின் முதல் கட்டமாக காவிரி- வெள்ளாறு இணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன எனக் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு அனுமதி அளிக்காத நிலையில் இந்த திட்டம் சட்டவிரோதமானது. எனவே அந்தப் பணியை நிறுத்த வேண்டும். ஏற்கனவே கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை இடிக்க உத்தரவிட வேண்டும். காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்க முடியாதபடி தடை விதிக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது போல, காவிரி நீர் ஒதுக்கீடு செய்யப்பட்டது போக உபரியாக காவிரி படுகையில் மீதமுள்ள நீரை தங்களின் மாநில பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நீர் ஒதுக்கீடு குறைப்பு

அதுபோல, தேசிய நீர் மேம்பாட்டு முகமையின் தீபகற்ப நதி இணைப்பு திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும் நீரை தமிழ்நாடு சார்ந்து இருப்பது பயன் அளிக்காது. ஏனெனில் இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள கோதாவரி- காவிரி இணைப்பு என்பது காவிரி படுகைக்கு முன்பாகவே முடிவடைகிறது. அந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் காண உத்தேசிக்கப்பட்ட நீர் ஒதுக்கீடு என்பது 83.27 டி.எம்.சி.யில் இருந்து 40.93 டி.எம்.சியாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் கர்நாடகா சுட்டிக்காட்டியுள்ளது.

SCROLL FOR NEXT