தேசிய செய்திகள்

கர்நாடக அரசின் வெறுப்பு பேச்சு தடை மசோதா தேவையற்றது- மத்திய அரசு கருத்து

கர்நாடக அரசு வெறுப்பு பேச்சு தடை மசோதாவை மாநில அரசு நிறைவேற்றியுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பாரதிய நியாய சங்கித (பி.என்.எஸ்.) சட்டத்தில் உள்ளன

கர்நாடக அரசு, வெறுப்பு பேச்சு தடை மசோதாவை கொண்டு வந்து சட்டசபையின் இரு சபைகளிலும் நிறைவேற்றியது. இதன்படி, குற்றம் புரிந்தால் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒப்புதல் வேண்டி இதை கவர்னர் தாவர்சந்த் கெலாட்டுக்கு அரசு அனுப்பியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கு ஒப்புதல் வழங்க வேண்டாம் என்று கவர்னரிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

மத்திய அரசு கடிதம்

இதையடுத்து கவர்னர் தாவர்சந்த் கெலாட், அந்த மசோதாவை அரசுக்கு திருப்பி அனுப்பினார். அதை மீண்டும் கவர்னருக்கு அரசு அனுப்பியது. இதையடுத்து கவர்னர் தாவர்சந்த் கெலாட், ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்தார். இந்த நிலையில் இந்த வெறுப்பு பேச்சு தடை மசோதா தேவையற்றது என்று மத்திய அரசின் உள்துறை கருத்து கூறியுள்ளது. இதுகுறித்து மத்திய அரசின் உள்துறை, கர்நாடக அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் இடம் பெற்றுள்ள விவரங்கள் வருமாறு:-

கர்நாடக அரசு வெறுப்பு பேச்சு தடை மசோதாவை மாநில அரசு நிறைவேற்றியுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பாரதிய நியாய சங்கித (பி.என்.எஸ்.) சட்டத்தில் உள்ளன. இந்த சூழ்நிலையில் இதற்கு தனியாக சட்டம் இயற்றுவது சட்ட ஒற்றுமையில் சிக்கல் ஏற்படும். அதனால் தற்போதைய சூழ்நிலையில் கர்நாடக அரசு கொண்டு வந்துள்ள இந்த வெறுப்பு பேச்சு தடை மசோதா தேவையற்றது. தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களே இந்த பிரச்சினையை கையாள போதுமானது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதனால் கர்நாடக அரசின் வெறுப்பு பேச்சு தடை மசோதாவை அமல்படுத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது.