கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

தமிழகத்துக்கு நீர் திறந்து விட முடியாது - சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா பிடிவாதம்

நடப்பாண்டில் போதிய மழை பெய்யாததால் கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது என்று கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நடப்பாண்டில் போதிய மழையின்றி வறட்சி நிலவுவதால், தமிழகத்துக்கு 11 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிடுவது கடினம் என்று கர்நாடகா அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.

இடையீட்டு மனு தாக்கல்

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக காவிரி விளங்குகிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, ஆண்டுதோறும் தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். இந்த நிலையில், நடப்பாண்டில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரில் 11 டி.எம்.சி. பற்றாக்குறை இருப்பதாகவும், அந்த நீரை உடனடியாகத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

விளக்கம் தேவை

இந்த மனு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் விக்ரம் நாத், ஆப்ரேஷ் குமார் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி விக்ரம் நாத், “காவிரி விவகாரத்தில் ஒவ்வொரு முறையும் தமிழக அரசு நீர் பற்றாக்குறை இருப்பதாகக் கூறுகிறது. ஆனால், பிறப்பிக்கப்பட்ட உத்தரவைவிட கூடுதலாகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு தரவுகளைச் சமர்ப்பிக்கிறது. இந்த முரண்பாடு குறித்து விளக்கம் தேவை” என்றார்.

அறிவுறுத்த வேண்டும்

இதற்குப் பதிலளித்த தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “காவிரி மேலாண்மை ஆணையம் தற்போதைய தரவுகளின் அடிப்படையில் மட்டுமே உத்தரவுகளைப் பிறப்பிக்கிறது. முந்தைய காலங்களில் ஏற்பட்ட நீர் பற்றாக்குறையை ஈடுசெய்வது குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படுவதில்லை.

நீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களிலும் அணைகளில் உள்ள நீரின் அளவுக்கு ஏற்ப விகிதாசார அடிப்படையில் தண்ணீரைப் பகிர்ந்தளிக்க வேண்டும். மேலும், ஏற்கனவே வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள நீரையும் கணக்கில் எடுத்துக்கொள்ள காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

தீர்ப்பு ஒத்திவைப்பு

கர்நாடக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், “நடப்பாண்டில் போதிய மழை பெய்யாததால் கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. குடியிருப்புப் பகுதிகளில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படாமல் இருக்கத் தண்ணீரைச் சேமிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, தமிழகத்துக்கு 11 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிடுவது கடினம்” என்று தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT