பெங்களூரு,
கர்நாடக மாநில பள்ளி கல்வித்துறை மந்திரி மது பங்காரப்பா பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் அரசு பள்ளிகளில் முந்தைய பா.ஜ.க. ஆட்சியின்போது கடந்த 2022-ம் ஆண்டில் மத அடையாளங்களை முன்னிலைப்படுத்தும் ஆடைகளை அணிய தடை விதிக்கப்பட்டது. நாங்கள் இதுகுறித்து ஒரு முடிவை எடுத்துள்ளோம். 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அதாவது பி.யூ.சி. வரை மாணவ-மாணவிகள் தங்களின் மத அடையாளங்களை முன்னிலைப்படுத்தும் ஆடைகளை அணியலாம். அதாவது ஹிஜாப், பூணூல், கைகளில் கட்டப்படும் புனித கயிறு, ருத்ராட்சை மாலை, தலைப்பாகை உள்ளிட்டவற்றை அணியலாம். முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. நடப்பு ஆண்டு முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. அரசியல் சாசன மாண்புகளுக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு கர்நாடகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும். மத அடையாள ஆடைகளை அணிந்து வரும் மாணவ-மாணவிகளை கல்வி நிறுவனங்கள் தடுக்க முடியாது.
சமீபத்தில் நுழைவு தேர்வில் பூணூல் அணிந்து வந்த சில மாணவர்களை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கவில்லை. இத்தகைய சம்பவங்கள், வரும் நாட்களில் நடைபெறாது. மத அடையாள ஆடைகளை அணியும் படி மாணவர்களை வற்புறுத்த முடியாது. அதேபோல் மத அடையாள ஆடைகளை அகற்றும்படியும் கூற முடியாது. ஆனால் தேசிய-மாநில அளவிலான நுழைவுத்தேர்வின்போது ஆடை கட்டுப்பாடுகளை அந்தந்த ஆணையங்கள் தீர்மானித்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.