பெங்களூரு
கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவின் மந்திரிசபையில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக பணியாற்றியவர் ரமேஷ் ஜார்கிகோளி. இவர் வேலை வாங்கி தருவதாக இளம்பெண் ஒருவருடன் நெருக்கமாக இருந்த ஆபாச வீடியோ வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கட்சி மேலிடம் உத்தரவின்பேரில் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ரமேஷ் ஜார்கிகோளியின் வீடியோவை வெளியிட்ட சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி, ரமேஷ் ஜார்கிகோளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெங்களூரு கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் புகாரும் அளித்து இருந்தார். ஆனால் அந்த புகார் மீது இன்னும் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. சம்பந்தப்பட்ட பெண் வந்து புகார் அளித்தால் தான் வழக்குப்பதிவு செய்வோம் என்று போலீசார் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் ரமேஷ் ஜார்கிகோளியின் ஆபாச வீடியோ வெளியான விஷயத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது அந்த வீடியோ 9 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்றும், அந்த வீடியோ ரஷியாவில் இருந்து வெளியானதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதே நேரத்தில் ரமேஷ் ஜார்கிகோளியுடன் நெருக்கமாக இருந்த இளம்பெண் தற்போது தனது குடும்பத்தினருடன் துபாயில் தஞ்சம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த இளம்பெண்ணுக்கு ரூ.25 கோடி கொடுத்து, துபாயில் சகல வசதிகளும் செய்து கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஏற்பாடுகளை ரமேஷ் ஜார்கிகோளியின் எதிரிகள் செய்து கொடுத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் அரசியல் ஆதாயங்களுக்காக ரமேஷ் ஜார்கிகோளியை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த வீடியோ வெளியானதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ரமேஷ் ஜார்கிகோளி வீடியோ பற்றி தினமும் புது புது தகவல்கள் வெளிவருவது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பெண்ணுடன் தான் இருப்பது போன்று வெளியான ஆபாச வீடியோ, 100 சதவீதம் போலியானது என ரமேஷ் ஜர்கிகோலி கூறியுள்ளார்.
தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில், 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து வீடியோ தயாரித்து வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறும் போது தனது அரசியல் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் அவரது குடும்பத்தை இழிவுபடுத்துவதற்கும் ஒரு சதித்திட்டத்திற்கு பலியானதாகக் கூறினார்.
இந்த சதியில் ஒரு உயர்மட்ட தலைவர் ஈடுபட்டுள்ளார். இதற்குப் பின்னால் இருக்கும் இந்த நபர்கள் ஷோபீஸ்கள் மற்றும் உண்மையான அரசியல் வலிமை இல்லை. அவர்களை எளிதாக தோற்கடிக்க முடியும்.சதித்திட்டம் தீட்டியவர்கள் பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர்கள், அவருடைய சொந்தப் பகுதி பெலகாவி அல்ல.ன்னையும் எனது குடும்பத்தையும் இழிவுபடுத்தும் இந்த முயற்சி தொடர்பான அனைத்து தகவல்களையும் நாங்கள் சேகரித்து வருகிறோம். இது ஒரு அரசியல் நோக்கத்துடன் செய்யப்படவில்லை, ஆனால் எனது அரசியல் வாழ்க்கையை முடிக்க தனிப்பட்ட நோக்கத்துடன் செய்யப்பட்டு உள்ளது. அந்த உயர்மட்ட தலைவர் மற்றும் பிறரின் அடையாளத்தை விரைவில் வெளிப்படுத்துவேன்.
வடக்கு பெங்களூரின் யேஷ்வந்த்பூர் மற்றும் ஓரியன் மால் பகுதியில் சதித்திட்டம் தீட்டப்பட்டது. அந்தப் பெண்ணுக்கு ரூ .5 கோடி வழங்கப்பட்டது. அவருக்கு வெளிநாட்டில் ஒரு அபார்ட்மெண்ட் வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் அனைத்து தகவல்களையும் சேகரித்து வருகிறோம் என கூறினார்.