தேசிய செய்திகள்

கர்நாடகாவில் நாளை மேல்-சபை தேர்தல்: காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ரெசார்ட்டில் தங்கவைப்பு

காங்கிரசின் 5-வது வேட்பாளர் வினய் கார்த்திக்கும் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரு,

நாளை மேல்-சபை தேர்தல்

கர்நாடக மேல்-சபையில் மொத்தம் 75 உறுப்பினர் இடங்கள் உள்ளன. இதில் 7 இடங்கள் காலியாகின்றன. இந்த இடங்கள் எம்.எல்.ஏ.க்கள் மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த 7 இடங்க ளுக்கு நாளை (வியாழக்கிழமை) தேர்தல் நடக்கிறது. இந்த 7 இடங்களுக்கு 8 பேர் களத்தில் உள்ளனர். அதாவது ஆளும் காங்கிரஸ் சார்பில் திப்பண்ணப்பா கமக்னூர், பி.கே.ஹரிபிரசாத், பி.வி.மோகன், சிவண்ணா மலவள்ளி, வினய் கார்த்திக் ஆகியோரும், பா.ஜனதா சார்பில் ரகு, லிங்கராஜ் பட்டீல், ஜனதா தளம் (எஸ்) சார்பில் கோவிந்தராஜ் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.

கர்நாடக சட்டசபையில் உள்ள கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களின் பலத்தின் அடிப்படையில் ஆளும் காங்கிரசுக்கு 4 இடங்களும், பா.ஜனதாவுக்கு 2 இடங்களும் கிடைக்கும். ஒரு இடத்தில் வெற்றி பெற 28 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. ஆனால் ஜனதா தளம் (எஸ்) கட்சியிடம் 18 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர். பா.ஜனதாவில் இருந்து அக்கட்சிக்கு 4 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. அதுபோக இன்னும் 6 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை.

ஆதரவு இல்லை

தேவையான ஆதரவு இல்லாத நிலையில் காங்கிரஸ் 5-வது வேட்பாளரை நிறுத்தியுள்ளது. 4 வேட்பாளர்களுக்கு தேவைப்படும் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு போக காங்கிரசிடம் 24 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அக்கட்சி வெற்றி பெற இன்னும் 4 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 3 பேரின் ஆதரவு காங்கிரசுக்கு கிடைக்கும். மேலும் பா.ஜனதாவில் இருந்து நீக்கப்பட்ட 2 எம்.எல்.ஏ.க்க ளின் ஆதரவும் காங்கிரசுக்கு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அதன்படி பார்த்தால் காங்கிரசின் 5-வது வேட்பாளர் வினய் கார்த்திக்கும் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சி

இதனால் மேல்-சபை தேர்தலில் தங்களது வேட்பாளரை வெற்றி பெற வைக்க ஜனதாதளம் (எஸ்) கட்சி, காங்கிரசார் இடையே போட்டா போட்டி எழுந்துள்ளது. இதனால் இரு கட்சி தலைவர்களும் எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொண்டு பேசி தங்களுக்கு ஆதரவாக இழுக்க முயற்சி நடந்த வருவதாக சொல்லப்படுகிறது.குறிப்பாக மத்திய மந்திரி குமாரசாமி சுயேச்சை எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொண்டு தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவை பெற முயற்சி செய்துள்ளார்.

மேலும் சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடனும் அவர் பேசியதாக சொல்லப்படுகிறது. எனவே மேல்-சபை தேர்தலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி ஓட்டுப்போடுவதை தடுக்கவும், குதிரைபேரத்தை தடுக்கவும் ரெசார்ட்டில் அவர்களை தங்க வைக்க முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மேலிட உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரெசார்ட்டில் தங்கவைப்பு

அதாவது நேற்று மாலை கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூரு அருகே பிடதியில் உள்ள ஒரு ரெசார்ட்டில் நடைபெற்றது. முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். இதில் மேல்-சபை தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண் டும், எந்தெந்த எம்.எல்.ஏ.க்கள் எந்த வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து தலைவர்கள் அறிவுறுத்தினர்.

ஒரு வாக்கு கூட செல்லாதவை ஆகிவிடக்கூடாது என்பதால் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் மிகவும் கவனமாக வாக்களிக்க வேண்டும் என்று தலைவர்கள் அறிவுரை கூறினர். இந்த கூட்டத்தை தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் அதே ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் நாளை நடைபெறும் தேர்தலில் நேராக ரெசார்ட்டில் இருந்து பஸ்களில் விதானசவு தாவுக்கு வந்து வாக்களிப்பார்கள் என கூறப்படுகிறது. அதுபோல் காங்கிரசார் ஜனதாதளம் (எஸ்) கட்சிகளை இழுக்காமல் இருக்கவும், அக்கட்சி தலைவர்கள் தங்களது எம்.எல்.ஏ.க்களை பத்திரமாக பாதுகாத்து வருவதாகவும் கூறப்படுகிறது.