தேசிய செய்திகள்

காஷ்மீர்: அமர்நாத் யாத்திரை 2.77 லட்சம் பக்தர்கள் தரிசனம்

இந்த யாத்திரைக்கான முன்பதிவு கடந்த ஏப்ரல் 15-ந்தேதி தொடங்கியது.

ஜம்மு

அமர்நாத் யாத்திரையில் பங்கேற்று இதுவரை 2.77 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

காஷ்மீரில் ஆண்டுதோறும் நடைபெறும் அமர்நாத் யாத்திரை கடந்த 3-ந்தேதி தொடங்கியது. ஆகஸ்டு 28-ந்தேதி இந்த யாத்திரை நிறைவடையும்.

இதையொட்டி, ஜம்முவில் உள்ள பகவதி நகர் முகாமில் இருந்து 13-வது குழுவாக 5,335 பக்தர்கள் நேற்று அதிகாலை புறப்பட்டனர். இதில் 3,911 ஆண்கள், 1,288 பெண்கள் மற்றும் 21 குழந்தைகள் இடம்பெற்றிருந்தனர். அவர்களில் 1,736 பேர் 84 வாகனங்களில் பால்டால் வழியாகவும். 3,599 பேர் 148 வாகனங்களில் பாரம்பரிய பஹல்காம் வழியாகவும் பயணம் மேற்கொண்டனர்.

மருத்துவ சான்றிதழ்

இந்த ஆண்டு யாத்திரை தொடங்கியதில் இருந்து இதுவரை அமர்நாத் குகைக்கோவிலில் 2.77 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும், ஜம்முவில் இருந்து இதுவரை மொத்தம் 93,036 பக்தர்கள் யாத்திரைக்காக புறப்பட்டுள்ளனர். இதற்காக பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மருத்துவ உதவிகளும் தேவைப்படும் இடங்களில் வழங்கப்படும்.

இந்த யாத்திரைக்கான முன்பதிவு கடந்த ஏப்ரல் 15-ந்தேதி தொடங்கியது. நபர் ஒருவர் ரூ.150 கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். மருத்துவ சான்றிதழ் ஒன்றையும் கட்டாயம் கொண்டு வர வேண்டும். நடப்பு ஆண்டில் 5 நாட்களில் 90 சதவீதம் அளவுக்கு பனிலிங்கம் உருகியது. எனினும், பக்தர்களின் கூட்டம் குறையாமல் அதிகரித்து வருகிறது.