ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப்படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டம் மீமண்டர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு கடந்த 5ம் தேதி ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் வனப்பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்புப்படையினர் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்புப்படையினர் பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கி சண்டை தொடர்ந்து இன்று 4வது நாளாக நீடித்து வருகிறது.
இந்நிலையில், சோபியானில் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட பயங்கரவாதி லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கிய தளபதி ஜாகீர் கானாய் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. என்கவுன்டர் நடந்த பகுதியில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை, வனப்பகுதியில் மேலும் ஒரு பயங்கரவாதி பதுங்கி இருப்பது தெரியவந்த நிலையில் அந்த பயங்கரவாதியையும் சுட்டுக்கொல்ல அப்பகுதியை சுற்றிவளைத்து பாதுகாப்புப்படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.