உத்தரகாண்ட்,
உத்தரகாண்டில் புகழ்பெற்ற சார்தாம் புனித யாத்திரையில் இடம்பெற்றுள்ள கேதார்நாத், யமுனோத்ரி கோவில்கள் குளிர்காலத்தையொட்டி 6 மாதங்கள் மூடப்படுகின்றன. அதன்படி வருகிற குளிர்காலத்தை முன்னிட்டு கேதார்நாத் கோவில் நேற்று காலை 8.30 மணிக்கு மூடப்பட்டது.
முன்னதாக பாரம்பரிய சடங்குகள் மற்றும் பூஜை செய்யப்பட்டன. பின்னர் கேதார்நாத் சாமியின் திருவுருவச்சிலை கோவிலில் இருந்து பல்லக்கில் எடுத்து வரப்பட்டு உகிமத்தில் உள்ள ஓம்கரேஷ்வரர் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. வருகிற 6 மாதங்களும் அங்கே பக்தர்கள் கேதார்நாத் சாமியை தரிசிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைப்போல யமுனோத்ரியிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகளை நடத்தியபின் நேற்று காலை 10.28 மணிக்கு கோவில் மூடப்பட்டது. பின்னர் கோவிலில் இருந்து யமுனை தேவியின் திருவுருவச்சிலை கர்சாலிக்கு பல்லக்கில் ஊர்வமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த 2 கோவில்களிலும் இந்த ஆண்டு 27 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக கோவில்களின் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.