தேசிய செய்திகள்

‘இந்தியா’ கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி வந்த மம்தாவுடன் கெஜ்ரிவால் சந்திப்பு

‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ள உள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள அரசியலமைப்பு மன்றத்தில் வருகின்ற ஜூன் 8-ந்தேதி(நாளை) ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு, ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, தேர்தல் தோல்விக்குப் பிறகு தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்தது. இதன் காரணமாக காங்கிரஸ் மீது தி.மு.க. தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்த நிலையில், டெல்லியில் நடைபெறும் ‘இந்தியா’ கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்பதால் அந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக தி.மு.க. அறிவித்துள்ளது. அதே சமயம், ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்றொரு கட்சியான ஆம் ஆத்மியும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காது என தகவல் வெளியாகியுள்ளது.

ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீப காலமாக காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார். பிராந்திய கட்சிகளை பலவீனப்படுத்த காங்கிரஸ் நினைக்கிறது என்று கெஜ்ரிவால் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

அதே சமயம், ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ள உள்ளார். இதற்காக இன்று அவர் டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில், டெல்லி வந்த மம்தா பானர்ஜியை ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்துள்ளார்.

சமீபத்தில் மேற்கு வங்காள மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த சூழலில், நாளை ‘இந்தியா’ கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்க உள்ளார். இந்நிலையில் மம்தா பானர்ஜியுடான கெஜ்ரிவாலின் சந்திப்பு கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.