புதுடெல்லி,
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சி.பி.ஐ.யால் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் முதல்-மந்திரிகள் அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா உள்பட 23 பேரையும் டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு விடுவித்து உத்தரவிட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அரசு தரப்பில் எந்த ஆதாரமும் இல்லை என்று கோர்ட்டு தெரிவித்துள்ளது.
வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பின் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர் சந்திப்பின்போது கண்ணீர் விட்டு அழுதார். தனக்கு எதிரான ஊழல் வழக்கு சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் சதி என்று அவர் கூறினார்.
இந்த நிலையில், கெஜ்ரிவால் விடுதலையானது குறித்து சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே செய்தியாளர்களிடம் பேசியபோது, “நமது நாடு நீதித்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் வலிமையால் இயங்குகிறது. பல்வேறு கட்சிகள், சாதிகள், மதங்கள் மற்றும் சமூகங்களைக் கொண்ட இவ்வளவு பெரிய நாடாக இருந்தாலும், நீதித்துறையின் காரணமாக அது சீராக செயல்படுகிறது.
நீதித்துறை இல்லாவிட்டால் நாட்டில் குழப்பமும், அமைதியின்மையும் நிலவும். இப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தவறு செய்யவில்லை என்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளதால், அதை மதித்து ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக டெல்லி ராம்லீலா மைதானத்தில் கெஜ்ரிவாலுடன் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை முன்னின்று நடத்தியவர் அன்னா ஹசாரே ஆவார். மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முன்பு கெஜ்ரிவாலுக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியபோது செய்தியாளர்களிடம் பேசிய ஹசாரே, “கெஜ்ரிவாலிடம் அரசியலுக்கு வர வேண்டாம் என நான் ஏற்கனவே அறிவுறுத்தினேன். உண்மையான நிறைவு சமூக சேவையில் உள்ளது என்று கூறினேன். ஆனால் அவர் கேட்கவில்லை” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.