தேசிய செய்திகள்

கேரளாவில் சோகம்: வயநாடு நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி; பலர் மாயம்

2024-ம் ஆண்டு வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 420-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

வயநாடு

கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகி உள்ளனர்.

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் மேப்பாடி அருகே வயநாடு-கல்லாடி சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த பகுதியில், 22.6 செ.மீ. அளவுக்கு அதிகனமழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக நிலச்சரிவு ஏற்பட்டது.

சுரங்கப்பணிக்காக தோண்டப்பட்ட மண் சரிந்து குவிந்துள்ளது. ஒரு வீடும், தேவாலயமும் முழுமையாக சேதமடைந்து உள்ளன. அப்பகுதியில் இருந்த பேருந்து நிறுத்தமும், பாலமும் மண்ணுக்குள் புதைந்துவிட்டன.

நிலச்சரிவு

நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்த 6 பேரை மீட்பு படையினர் முதலில் மீட்டனர். அவர்கள் மேப்பாடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் வெளிமாநில தொழிலாளர்கள் ஆவர். தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற இரண்டு பஸ்களும் மண்ணில் புதையுண்டு போயின. மேலும் சில தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கி உள்ளனர்.

மீட்பு பணிகள்

அவர்களை மீட்கும் பணியில், பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியிலிருந்து மக்கள் வெளியேற தொடங்கியுள்ளனர்.

வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். மேப்பாடி பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. 2024-ம் ஆண்டு வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 420-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 390-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதன் பின்னர் வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டு மக்களை பாதித்து உள்ளது.