தேசிய செய்திகள்

கேரளா: ஷிகெல்லா தொற்றுக்கு 7 வயது சிறுவன் பலி; 4-வது மரணம் பதிவு

ஷிகெல்லா தொற்று ஏற்பட்டால், டயோரியா, காய்ச்சல் மற்றும் வயிற்று பிடிப்பால் வலி போன்றவை ஏற்படும்.

மலப்புரம்

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் ஷிகெல்லா எனப்படும் பாக்டீரியா தொற்று விரைவாக பரவி வருகிறது. பரிசோதனையில், இதுவரை 138 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில், கோழிக்கோடு மாவட்டத்தில் அதிக பாதிப்புகள் பதிவாகி உள்ளன.

77 பேருக்கு பாதிப்பு இருக்க கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதில், கடந்த 12-ந்தேதி அர்ஜாவ் (வயது 7) என்ற சிறுவனுக்கு காய்ச்சல் மற்றும் டயோரியா பாதிப்பு ஏற்பட்டு, கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஷிகெல்லா தொற்று

இதன்பின்னர், அந்த சிறுவனுக்கு ஷிகெல்லா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனினும், அதில் பலனின்றி அர்ஜாவ் இன்று காலை பலியானான். கேரளாவில் நடப்பு ஆண்டில் இந்த வியாதியால் ஏற்பட்ட 4-வது மரணம் இதுவாகும்.

இந்த ஷிகெல்லா தொற்று ஏற்பட்டால், டயோரியா, காய்ச்சல் மற்றும் வயிற்று பிடிப்பால் வலி போன்றவை ஏற்படும். கெட்டுப்போன உணவு அல்லது தண்ணீர் மற்றும் தொற்று ஏற்பட்ட நபரிடம் இருந்து இந்த வியாதி பரவும். அதனால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.