தேசிய செய்திகள்

கேரள சட்டசபை தேர்தல்: பா.ஜனதா 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

பா.ஜனதா தலைவர் நிதின் நபீன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கொச்சி,

கேரள சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி பா.ஜனதா சார்பில் முதல்கட்டமாக 47 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை கட்சி தலைமையகம் 2 நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. 2-ம் கட்ட வேட்பாளர்களை இறுதி செய்யும் பணி டெல்லியில் நடைபெற்றது. பா.ஜனதா தலைவர் நிதின் நபீன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், 2-ம் கட்டமாக 39 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ஆரன்முளா தொகுதியில் பா.ஜனதா முன்னாள் மாநில தலைவரும், மிசோரம் முன்னாள் கவர்னருமான கும்மனம் ராஜசேகரன், காசர்கோடு தொகுதியில் அஸ்வின், மலப்புரம் தொகுதியில் அஸ்வதி குமார், நாட்டிகா தொகுதியில் முகுந்தன், தனூர் தொகுதியில் தீபக் புழக்கல், மஞ்சேரி தொகுதியில் பத்மஸ்ரீ, கொங்காட் தொகுதியில் ரேணு சுரேஷ் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் மத்திய முன்னாள் மந்திரிகள் ராஜீவ் சந்திரசேகர், முரளீதரன், மாநில முன்னாள் தலைவர் சுரேந்தர் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.