திருவனந்தபுரம்,
கேரளம் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வருகிற 9-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி மாநிலத்தில் பிரசாரம், தேர்தல் அறிக்கை வெளியிடும் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையில், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மகளிருக்கு ரூ.2500 கூப்பன், ஆண்டுக்கு 2 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். இரண்டு சிலிண்டர்களும் ஓணம் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், தேவை இருக்கும் பெண்கள், விதவைகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படும். கேரளத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்கப்படும். வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மகளிருக்கு மாதந்தோறும் பக்சய ஆரோக்கிய சுரக்சா திட்டத்தின் கீழ் அட்டை வழங்கப்படும்.
இந்த அட்டை மாதந்தோறும் ரூ.2,500க்கு ரீசார்ஜ் செய்யப்படும். அதன் மூலம் பெண்கள் மருந்துகள், மளிகைப் பொருள்கள் வாங்கிக் கொள்ளலாம். சபரிமலை ஐயப்பன் கோயிலின் பாரம்பரியம் காக்க தனி சட்டம் உருவாக்கப்படும்.கேரளத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும். திருவனந்தபுரம் - கன்னூர் பகுதிகளை இணைக்கும் வகையில் அதிவேக ரெயில் சேவை உருவாக்கப்படும் என்பது உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.