தேசிய செய்திகள்

கேரளாவிலும் மகளிருக்கு இலவச பஸ் பயண திட்டம்: 15 -ம்தேதி தொடங்கப்படும் என அறிவிப்பு

கேரளத்தில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (யு.டி.எப்) ஐந்து முக்கிய வாக்குறுதிகளுள் ஒன்றாக 'பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம்' அறிவிக்கப்பட்டது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை வழங்க மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் வருகிற 15-ஆம் தேதி முதல் கேரள அரசின் சாதாரண சேவை பேருந்துகளில் அமல்படுத்தப்பட உள்ளது. அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்-மந்திரி வி.டி. சதீசன் இந்த தகவலை கூறினார். அவர் கூறியதாவது: 'இந்திரா உத்தரவாத' திட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்படும் இந்தச் சலுகைக்கு ‘பிரியதர்ஷினி’ என பெயரிடப்பட்டுள்ளது.

தற்போதைய வடிவில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மாதந்தோறும் ரூ.60 கோடிக்கும் அதிகமாகவும், ஆண்டுக்கு சுமார் ரூ.800 கோடியும் செலவாகும். பெண்களின் வயது, சமூக அல்லது பொருளாதார பின்னணி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து தரப்பு பெண்களுக்கும் இந்த இலவச பயணச் சலுகை வழங்கப்படும். கே.எஸ்.ஆர்.டி.சி.யின் வருவாய் அதிகரித்து அதன் நிதிநிலை மேம்பட்ட பிறகு, மற்ற வகை பேருந்து சேவைகளுக்கும் இந்தச் சலுகையை விரிவுபடுத்துவது குறித்து அரசு பரிசீலனை செய்யும்” என்றார்.