திருவனந்தபுரம்
கேரளாவில் மலங்கரா தேவாலயம் ஒன்று உள்ளது. இந்தியாவிலேயே மிகவும் பழமையான தேவாலயம் இது. இந்த தேவாலயத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். அதே தேவாலயத்தைச் சேர்ந்த ஒரு பாதிரியாருடன் அந்தப் பெண்ணுக்கு திருமணத்துக்கு முன்பு உறவு இருந்துள்ளது. அவர் தனது இரண்டாம் மகளின் ஞானஸ்னான சமயத்தில் இதை எண்ணி மன உளைச்சலில் இருந்துள்ளார். அதனால் அந்த தேவாலயத்தை சேர்ந்த ஒரு பாதிரியிடம் அவர் தனது உறவு குறித்து தெரிவித்து பாவமன்னிப்பு பெற்றுள்ளார்.
அந்தப் பெண் கூறியதை பதிவு செய்த பாதிரியார் அதை அவருடைய கணவரிடம் சொல்வேன் என மிரட்டி அவரை பலாத்காரம் செய்துள்ளார். அந்த நிகழ்வை அந்தப் பெண்ணுக்கு தெரியாமல் வீடியோ எடுத்த அந்த பாதிரியார் அதே தேவாலயத்தைச் சேர்ந்த மற்ற பாதிரியார்களுடன் பதிர்ந்துக் கொண்டுள்ளார். அவர்களும் இந்தப் பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர். அத்துடன் இந்த வீடியோ டெல்லியைச் சேர்ந்த ஒரு பாதிரியாருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அந்த டில்லி பாதிரியார் கேரளா வந்து ஒரு ஓட்டலில் ரூம் எடுத்து இந்தப் பெண்ணை மிரட்டி உல்லாசமாக இருந்துள்ளார். ரூம் காலி செய்யும் போது பாதிரியார் பணம் கொடுக்காமல் இந்தப் பெண்ணை பணம் கட்ட சொல்லி இருக்கிறார். அந்தப் பெண் தனது டெபிட் கார்டின் மூலம் ரூம் பில்லை செட்டில் செய்துள்ளார். அந்த டெபிட் கார்ட் மெசேஜ் அவருடைய கணவருக்கு சென்றுள்ளது. இந்த விவகரம் தொடர்பில் பெண்ணை அவர் கணவர் விசாரித்த போது நடந்தவைகளை சொல்லி அந்தப் பெண் கதறி இருக்கிறார்.
இதைத் தொடர்ந்து அந்தக் கணவன் ஆர்தடாக்ஸ் தேவாலய தலைவருக்கு புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் விசாரணைக்கு உத்தரவிட்ட தேவாலயம் புகாரில் குறிப்பிட்டவர்களில் ஐந்து பேரை இடை நீக்கம் செய்துள்ளது. இந்நிலையில் இதுவரை இந்த விவகாரத்தில் அமைதி காத்து வந்த நிர்வாகம் மவுனம் கலைத்திருக்கிறது.
பாதிரியார்கள் மீதான இந்த குற்றச்சாட்டை வெளிக் கோண்டு வந்த தி நியூஸ் மினிட் இணையதள நிருபர் மேகா , நிர்வாகத்தை அணுகி விளக்கம் கோரினார். அதற்கு பதிலளித்த அவர்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக அந்த பெண்ணும் அவரது கணவரும் மட்டுமே மாறி மாறி கூறி வருகின்றனர், ஆனால் அவர்கள் தரப்பில் எந்த புகாரும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை; ஏன் இதுவரை புகார் தரவில்லை, குற்றம் சுமத்துபவர்களே புகார் தர வேண்டுமே தவிர நாங்கள் இல்லை என்றனர்.
தொடர்ந்து பேசிய நிர்வாகத்தினர் காவல்துறையில் புகார் கொடுக்க விடாமல் அவர்களை தடுப்பது என்ன ?, எங்களிடம் இந்த விவகாரம் எழுப்பப்பட்ட நிலையில் முதற்கட்டமாக இது குறித்த உண்மை நிலையை அறிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது, இளம் வயது சிறுமிக்கு ஒருவேளை நேர்ந்திருந்தால் நிர்வாகம் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும், ஆனால் இவரோ திருமணமான பெண், அவர்தான் புகார் தர முடியும் என்றும் கூறினர்
குற்றச்சாட்டில் தொடர்புடைய 5 பேரும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே என கேட்டபோது , அவர்கள் 5 பேருக்கும் விடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்று நிர்வாகத்தினர் கூறினர். மேலும் மார்ச் மாதமே பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணின் கணவர் புகாரளித்ததாகவும் அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், 5 பேர் மீதும் குற்றச்சாட்டு உறுதியானால் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் நடவடிக்கை பாயும் என்றும், புகார் என்பதால் தொடர்புடைய அனைவருக்கும் உரிய வாய்ப்பு வழங்கி உண்மையை கொண்டு வர சர்ச் நிர்வாகம் முயல்வதாகவும் அதுவே இயற்கை நீதி அடிப்படையில் சரி என்றும் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் எனது மனைவியை மிரட்டி பலாத்காரம் செய்தது 5 பாதிரியார்கள் என கருதினேன். ஆனால் மேலும் 3 பாதிரியார்கள் மிரட்டி பலாத்காரம் செய்தது இப்போதுதான் தெரியவந்தது என அவரது கணவர் கூறியுள்ளார். பாதிரியார்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தகுந்த இடத்தில் புகார் செய்யப்படும் என கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் விரிவான அறிக்கை அளிக்க கேரள மாநிலம் டி.ஜி.பி. மற்றும் மாநில காவல்துறை தலைவருக்கு மகளிர் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.