தேசிய செய்திகள்

கேரள கவர்னர் மாளிகையில் அசைவ உணவுக்கு தடை: பதவி ஏற்றதும் ஓம் பிரகாஷ் அதிரடி உத்தரவு

கவர்னர் மாளிகையில் அசைவ உணவு தடை செய்யப்பட்டுள்ளதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

திருவனந்தபுரம்,

கேரள கவர்னர் மாளிகையில் அசைவ உணவு சமைக்கக்கூடாது என பிறப்பிக்கப்பட்ட புதிய கவர்னரின் உத்தரவுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

கேரளம் மாநிலத்தின் கவர்னராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர், தமிழ்நாடு பொறுப்பு கவர்னராகவும் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் அவர் கேரளம் மாநில கவர்னர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, தமிழ்நாடு கவர்னராக நியமிக்கப்பட்டார்.

கவர்னர் பொறுப்பேற்பு

இதனைத்தொடர்ந்து சிக்கிம் கவர்னராக இருந்த, ராஜஸ்தானை சேர்ந்த ஓம் பிரகாஷ் மாத்தூர் என்பவரை கேரளத்தின் புதிய கவர்னராக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டார். அதன்படி நேற்று மதியம் 12.30 மணிக்கு திருவனந்தபுரம் லோக் பவனில் கேரளத்தின் 29-வது கவர்னராக ஓம் பிரகாஷ் மாத்துர் பதவியேற்கும் விழா நடந்தது.

கேரளம் தலைமை நீதிபதி சவுமென் சென், அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதில் முதல்-மந்திரி வி.டி.சதீசன், எதிர்க்கட்சி தலைவர் பினராயி விஜயன், மந்திரிகள், தலைமைச்செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அசைவ உணவுக்கு தடை

இந்த நிலையில் அலுவலக பணிகளை தொடர்ந்த ஓம் பிரகாஷ் மாத்துர், லோக் பவனில் (கவர்னர் மாளிகை) அசைவ உணவுகளுக்கு தடை விதித்து அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். இந்த சம்பவம் கேரளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. லோக் பவனில் அசைவ உணவு தடை செய்யப்பட்டுள்ளதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் கண்டனம்

இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் எம்.பி தனது பேஸ்புக் பக்கத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

கேரளம் ஒரு கலப்பு உணவு பண்பாடு கொண்ட மாநிலம். கடலோர மாநிலம் என்பதால் மீன்வளம் அதிகம். எனவே சைவ உணவு உண்பவர்கள், அசைவ பிரியர்கள் என ஒவ்வொருவரும் இங்கு சரிக்கு நிகராக வாழ்ந்து வருகிறார்கள். உணவு பழக்க வழக்கங்களை தடை செய்யவோ, இனி என்ன உணவு உண்ண வேண்டும் என்று அறிவுறுத்தவோ யாராவது முயன்றால், அதை ஏற்றுக்கொள்ள முடியாது.

உணவு விஷயத்தில் கூட தலையிட்டு, கேரள மக்களின் தனித்துவமான கூட்டு வாழ்க்கை முறையை அழிக்கும் இது போன்ற உத்தரவுகள், அரசியலமைப்பு சட்டத்தால் உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT