தேசிய செய்திகள்

போலீசாரை கண்டதும் குக்கரில் கஞ்சாவை மறைத்த நபர்: விசில் சத்தத்துடன் வந்த வாசனை.. அடுத்து நடந்த பரபரப்பு

போலீசார் வருவதை பார்த்ததும் குக்கரில் கஞ்சாவை மறைத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சூர்,

கேரளம் மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னங்குளம் அருகே அடுப்புட்டி பகுதியை சேர்ந்தவர் பினீஷ் (வயது 40) என்பவர் வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக குன்னங்குளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அவரது வீட்டிற்கு வந்தனர்.

முன்னதாக போலீசார் வருவதை அறிந்த பினீஷ், கஞ்சா இருந்த ஒரு பிளாஸ்டிக் கவரை சமையலறையில் அடுப்பில் சாதம் வெந்து கொண்டிருந்த பிரஷர் குக்கருக்குள் வைத்து அப்படியே விட்டுவிட்டார். தொடர்ந்து போலீசார் வந்து வீடு முழுவதும் சோதனை நடத்தியும் கஞ்சா கிடைக்கவில்லை. இதற்கிடையே அடுப்பில் இருந்த பிரஷர் குக்கர் தொடர்ந்து விசில் சத்தம் எழுப்பியது. பின்னர் கஞ்சா வாசனையும் வந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அடுப்பில் சாதம் வெந்து கொண்டிருந்த பிரஷர் குக்கரை இறக்கி, திறந்து பார்த்தனர். அப்போது பிரஷர் குக்கரில் சாதத்துக்கு நடுவே. கஞ்சா இருந்த ஒரு பாக்கெட் இருப்பதை பார்த்தனர். இதையடுத்து அதில் இருந்த 401 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் பினீசை கைது செய்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.