தோளில் சுமந்து செல்லும் காட்சி 
தேசிய செய்திகள்

கேரளா: சாலை வசதி இல்லாததால் நோயாளியை தொட்டில் கட்டி சுமந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற மக்கள்

ஏற்கனவே அந்த கிராமத்தில் சாலை வசதி இல்லாமல் ஒரு குழந்தை இறந்தது என்பது குறிப்பிடதக்கது.

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடமலக்குடி கிராமத்தில் சாலை வசதி இல்லாத காரணத்தினால் உடல்நிலை சரியில்லாத நபரை 5 கி.மீ. தூரம் உள்ள மருத்துவமணைக்கு காட்டுப் பகுதி வழியாக தொட்டில் கட்டி அவரை தோளில் சுமந்து சென்ற கிராம மக்கள்.

சாலை வசதி

மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளுக்குள் நடுவே இந்த இடமலக்குடி இருப்பதால் , நீண்ட காலமாகவே அங்குள்ள கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். பருவமழைக் காலத்தில், ஏற்கெனவே கடினமாக உள்ள பாதைகள் கிட்டத்தட்டப் பயன்படுத்த முடியாதவையாக மாறிவிடுகின்றன, அந்த கிராமத்தில் ஒழுங்கான சாலை வசதி இல்லை என்பதால் கிராம மக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தனர். தங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்கவும் , மருத்துவமனைக்கு செல்லவும் குறைந்தது 5 கி.மீ. தூரம் தாண்டி மலைப்பாதை வழியாக செல்ல வேண்டி இருந்தது. மழையின் காரணமாக மலைப்பாதையும் தற்போது உபயோகிக்க முடியாதவாறு போனது.

தோளில் சுமந்து சென்றனர்

இடமலக்குடி பஞ்சாயத்தில் உள்ள கூடல்லார்குடியை சேர்ந்தவர் மலையப்பன்(வயது75). இவர் கடந்த ஒரு வாரமாக வயிற்று வலி , காய்ச்சல் மற்றும் உடல் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலையில் அவரது உடல் நலம் மோசம் அடைந்தது. இனிமேலும் காத்திருக்க முடியாது என்று கிராம மக்கள் மலையப்பனை சேலையில் சுற்றி தொட்டில்போல் அமைத்து, அதனை மூங்கில் கம்பில் கட்டி முன்னும் பின்னும் தோளில் சுமந்து கடினமான காட்டுப்பகுதியில் ஒருத்தர் மாற்றி ஒருத்தர் தூக்கி சென்று சாலை வசதி உள்ள அனைக்குளத்தை அடைந்தனர். பின்பு ஒரு ஆட்டோவில் அவரை ஏற்றி அடிமாலி தாலுகாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த காட்சி இணையத்தில் வேகமாக பரவியது. இந்த காட்சியின் மூலம் இடமலக்குடி மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மீண்டும் அனைவரின் கவனத்திற்கு வந்துள்ளது.

ஏற்கனவே அந்த கிராமத்தில் சாலை வசதி இல்லாமல் ஒரு குழந்தை இறந்தது என்பது குறிப்பிடதக்கது.