தேசிய செய்திகள்

டெல்லியில் பிரதமர் மோடியுடன் கேரள முதல்-மந்திரி சதீசன் சந்திப்பு

மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு மத்திய அரசிடம் இருந்து அனைத்து உதவிகளையும் ஆதரவையும் கோரியதாக சதீசன் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

கேரளாவில் சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று 10 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.

கேரளம் மாநில முதல் மந்திரியாக வி.டி.சதீசன் கடந்த 18-ம் தேதி பதவியேற்றார். இதில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

முதல் மந்திரியாக பதவியேற்ற பிறகு முதல் முறையாக வி.டி.சதீசன் டெல்லி சென்றார். டெல்லியில் உள்ள கேரளா இல்லத்தில் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தலைவர்களுடன் சந்திப்பு

டெல்லி சென்றடைந்த வி.டி.சதீசன் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே. கே.சி.வேணுகோபால், பிரியங்கா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, சட்டசபைத் தேர்தலில் தனக்கு ஆதரவாக பிரசாரம் செய்த தலைவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

கேரளாவிற்கு உதவி

இந்தநிலையில், டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் முதல்-மந்திரி சதீசன். கேரளம் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமருடன் விவாதித்ததாகவும், மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு மத்திய அரசிடம் இருந்து அனைத்து உதவிகளையும் ஆதரவையும் கோரியதாகவும் சதீசன் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

இந்த சந்திப்பின் போது, ​​கேரளாவின் புகழ்பெற்ற பாரம்பரிய நடன நாடகமான கதகளியை சித்தரிக்கும் ஒரு சிறிய நடனக் கலைஞரின் சிலையை முதல்-மந்திரி சதீசன் பிரதமர் மோடிக்கு நினைவு பரிசாக வழங்கினார்.

கேரளாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் வெற்றியைத் தொடர்ந்து பதவியேற்ற பிறகு, சதீசன் பிரதமரை சந்தித்தது இதுவே முதல் முறையாகும்.