புதுடெல்லி
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக நேற்று கடுமையாக தாக்கியது. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என பலர் கொல்லப்பட்டு உள்ளனர். இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் காணப்படுகிறது.
ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது.
இந்த தொடக்க கட்ட தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட மூத்த ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டு விட்டனர் என இஸ்ரேல் பாதுகாப்பு படை இன்று தகவல் தெரிவித்து உள்ளது. இந்த நிலையில், ஈரான் உச்ச தலைவர் காமேனி படுகொலை சர்வதேச சட்ட மீறல் ஆகும் என சீனா கண்டனம் தெரிவித்து உள்ளது.
இதேபோன்று ரஷியா, வடகொரியாவும் இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்த நிலையில், ஈரான் உச்ச தலைவர் காமேனி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்தியாவில் தலைநகர் டெல்லியில் ஷியா சமூகத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்றனர். அப்போது அவர்கள் கருப்பு கொடி ஏந்தியும், காமேனியின் புகைப்படங்களை சுமந்தபடியும் சென்றனர்.